Published : 20 Mar 2022 05:55 AM
Last Updated : 20 Mar 2022 05:55 AM
சமூக வலைதளங்களில் போலியான வேலைவாய்ப்பு விளம்பரத்தை பதிவேற்றம் செய்து, பணமோசடியில் ஈடுபட்ட காஞ்சிபுரத்தை சேர்ந்தவரை, தூத்துக்குடி சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே மருதன்வாழ்வு கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகன் ராஜேந்திரபிரசாத் (28). இவரது செல்போன் எண்ணுக்கு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி என்ற வாட்ஸ்அப் குழுவில் பிரபல தனியார் நிறுவனத்துக்கு வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்வதாக தகவல் வந்துள்ளது. இதை நம்பி இரண்டு தவணையாக மொத்தம் ரூ.83,000-ஐ காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கிருபாகரன் என்பவரது வங்கி கணக்குக்கு ராஜேந்திர பிரசாத் செலுத்தியுள்ளார்.
அதன்பின்னர், முறையான பதில் இல்லை. அந்த நபரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தராஜேந்திர பிரசாத் தூத்துக்குடிமாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தார்.
தூத்துக்குடி சைபர் கிரைம் ஆய்வாளர் ஆ.சிவசங்கரன் தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், காஞ்சிபுரம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த கோவிந்தன் மகன் கிருபாகரன் என்பவர், வாட்ஸ் அப் குழுவில் தனியார் நிறுவனத்துக்கு வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்வதாக போலியான விளம்பரத்தை பதிவேற்றம் செய்து, போலியான இ-மெயில் முகவரி மூலம் வேலைக்கு தொடர்பு கொள்பவர்களை ஏமாற்றியுள்ளது தெரியவந்தது.
சைபர் கிரைம் போலீஸார் நேற்று முன்தினம் இரவு திருவண்ணாமலையில் வைத்து கிருபாகரனை கைது செய்தனர். பின்னர் அவரை தூத்துக்குடி அழைத்து வந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் 10-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி பல லட்சம் வசூல் செய்தது தெரிய வந்தது. கிருபாகரனை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பேரூரணி மாவட்டச் சிறையில் அடைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT