Published : 19 Mar 2022 04:20 AM
Last Updated : 19 Mar 2022 04:20 AM

குறுந்தகவல் பரிமாற்றம் மூலம் சேலத்தில் இருவரிடம் ரூ.2 லட்சம் மோசடி

சேலம்

சேலத்தில் செல்போன் குறுந்தகவல் மூலம் இருவரிடம் ரூ. 2 லட்சம் மோசடியில் ஈடுபட்டவர் தொடர்பாக சைபர் கிரைம் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் அம்மாப்பேட்டை லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அம்புரோஸ் பர்வீன் (38). இவரது செல்போனுக்கு வந்த குறுந்தகவலில் ஒரு சதவீதம் வட்டியில் கடன் தருவதாக ஒரு தனியார் வங்கியின் பெயர் குறிப்பிடப்பட்டு வந்திருந்தது.

குறுந்தகவல் வந்த எண்ணை அம்புரோஸ் பர்வீன் தொடர்பு கொண்டபோது, ரூ.8 லட்சம் உடனடியாக கடன் வழங்குவதாகவும், அதற்கு ஆவணக் கட்டணம் மற்றும் 2 மாத இஎம்ஐ. கட்டணம் உள்ளிட்ட செலவுக்கு ரூ.1 லட்சத்து 27 ஆயிரம் பணம் கட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதை உண்மை என நம்பிய அவர் தனது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை பரிமாற்றம் செய்துள்ளார். அதன்பிறகு அந்த குறிப்பிட்ட செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது, சுவிட்ச் ஆப் செய்யப் பட்டிருந்தது. இதுதொடர்பாக சைபர் கிரைம் பிரிவு போலீஸில் புகார் செய்தார்.

இதேபோல, சேலம் உடையாப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாரதி (33). இவரது செல்போன் எண்ணுக்கு ஆன்லைன் வேலைவாய்ப்பு உள்ளதாக குறுந்தகவல் வந்துள்ளது. இதில், இ-மெயில் முகவரியை கிளிக் செய்து அதில் கேட்கப்பட்ட விவரங்களை பாரதி தெரிவித்துள்ளார். மேலும், ரூ.78,300 சர்வீஸ் கட்டணம் செலுத்தினால் உடனடியாக வேலை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை நம்பிய பாரதி உடனடியாக பணத்தை அவர்கள் குறிப்பிட்ட வங்கி க்கணக்கு அனுப்பியுள்ளார்.

பின்னர், வேலை தொடர்பாக எந்த தகவலும் வராததால் அது போலி என்பது தெரிந்து

சேலம் மாநகர சைபர் கிரைம் பிரிவில் புகார் செய்தார்.இவ்விரு புகார்கள் தொடர்பாக சைபர் கிரைம் பிரிவு இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x