Published : 24 Feb 2022 05:57 AM
Last Updated : 24 Feb 2022 05:57 AM
ரிமோட் குண்டு மூலம் சிவகங்கை நகராட்சித் தலைவர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட திமுக நிர்வாகி உட்பட அனைவரையும் விடுவித்து சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிவகங்கை நகராட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றுவதில் திமுக மாவட்ட துணைச் செயலாளர் மணிமுத்துவுக்கும், திமுகவில் இருந்து பிரிந்துசென்ற முருகனுக்கும் இடையே போட்டி நிலவியது. இதில் முருகன் வெற்றிபெற்று நகராட்சித் தலைவரானார். இந்நிலையில், 2007-ம் ஆண்டு ஜூன் 29-ம் தேதி நகராட்சித் தலைவர் முருகன் நகராட்சி அலுவலகத்தில் இருந்து தனது காரில் வீட்டுக்குப் புறப்பட்டார்.
அப்போது ரிமோட் கண்ட்ரோல் மூலம், காரில் பொருத்தப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் பலத்த காயமடைந்த முருகன், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார். கார் ஓட்டுநர் பாண்டியின் 2 கால்களும் துண்டாயின.
இதுதொடர்பாக சிவகங்கையைச் சேர்ந்த மணிமுத்து, குமரன் (எ) மந்தக்காளை, பாலச்சந்தர் (எ) பாலா, சரவணன், மாமுண்டி (எ) செந்தில், கே.கண்ணன், பாண்டி, பி.கண்ணன், முருகபாண்டி, கம்பம் மனோகரன், சென்னை வீரமணி ஆகிய 11 பேர் மீது சிவகங்கை டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
போலீஸ் தரப்பில் 139 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டன. மேலும் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது அரசியல் பகை, கேபிள் டிவி தொழில் முன்விரோதம் போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
மேலும் இந்த வழக்கு சிவகங்கை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது.
வழக்கு விசாரணையின்போதே குற்றம் சுமத்தப்பட்ட பாலா, முருகபாண்டி ஆகிய இருவரும் இறந்தனர். மேலும் இந்த வழக்கில் சென்னையைச் சேர்ந்த வீரமணியை 2012-ம் ஆண்டு உயர் நீதிமன்றம் விடுவித்தது.
இந்நிலையில் 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி சுமதி சாய்பிரியா, குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீதான குற்றத்தை அரசு தரப்பில் சரிவர நிரூபிக்கவில்லை எனக் கூறி அனைவரையும் வழக்கில் இருந்து விடுவித்து தீர்ப்பளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT