Published : 22 Jan 2022 11:33 AM
Last Updated : 22 Jan 2022 11:33 AM
காஞ்சிபுரத்தில் பிரபல தாதாவாக வலம் வந்தவர் ஸ்ரீதர். இவர் கம்போடியாவில் தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து இவரது கார் ஓட்டுநரான தினேஷ் ஒரு குழுவாகவும், அவரது மைத்துனர் தனிகா ஒருகுழுவாகவும் செயல்பட்டு வந்துள்ளனர். இவர்களுக்குள் ஸ்ரீதரின் இடத்தைப் பிடிக்க கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
இதனால் இவர்கள் அணிகளுக்குள் மாறி, மாறி கொலைகளை செய்து வருகின்றனர். மேலும் வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் செயலிலும் ஈடுபட்டுள்ளனர். இதில் தினேஷின் வலதுகரமாக செயல்பட்டு வந்தவர் பொய்யாகுளம் தியாகு. இவர் காவல்துறையின் நெருக்கடியால் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை தலைமையிலான தனிப்படையினர் பொய்யாகுளம் தியாகுவைப் பிடிக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தினர்.
அப்போது அவர் புதுதில்லியில் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ஏடிஎஸ்பி வெள்ளத்துரை தலைமையிலான தனிப்படையினர் புதுதில்லி விரைந்தனர்.
புதுதில்லியில் மதராஸ் காலனி என்ற பகுதியில் ஆறுமுகம் என்பவர்வீட்டில் பதுங்கி இருந்த தியாகுவைப் பிடிக்க திட்டமிட்டிருந்தபோது அங்கிருந்து தியாகு தப்பினார். அவரை ராஜ்குமார் என்பவர்காரில் ஹரியாணா மாநிலம் நோக்கிச் அழைத்துச் செல்லும்போது கொடுஹா பகுதியில் போலீஸார் துப்பாக்கி முனையில் அவரைக் கைது செய்தனர்.
பின்னர் தியாகுவை புதுதில்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் அங்கிருந்து காஞ்சிபுரம் அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தியாகு தப்பிக்க துணை செய்தகார் ஓட்டுநர் ராஜ்குமார் என்பவரையும், தியாகு தங்குவதற்கு இடமளித்த மதராஸ் காலனி பகுதியில் உள்ள ஆறுமுகம் என்பவரையும் தனிப்படை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் ரயில் மூலம்காஞ்சிபுரம் அழைத்து வரப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT