Last Updated : 26 Aug, 2020 02:59 PM

 

Published : 26 Aug 2020 02:59 PM
Last Updated : 26 Aug 2020 02:59 PM

காவல் நிலையம் அருகே பெண் கொலை செய்யப்பட்ட வழக்கு: வியாபாரி கைது

தென்காசி

ஆலங்குளம் காவல் நிலையம் அருகே பெண் கொலை வழக்கில் வியாபாரி கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள நாட்டார்பட்டியைச் சேர்ந்தவர் முருகன் (45).

பாவூர்சத்திரத்தில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டது. வியாபார நிமித்தமாக திருச்சுழிக்கு சென்றபோது, அந்த பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவரது மனைவி சித்ரா (36) என்பவருடன் முருகனுக்கு பழக்கம் ஏற்பட்டது.

சித்ரா தனது முதல் கணவரை பிரிந்து, மூர்த்தியை 2-வது திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தி வந்தார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக மூர்த்தியை விட்டு பிரிந்த சித்ரா, தனது மகளுடன் நாட்டார்பட்டியில் உள்ள முருகன் வீட்டுக்கு வந்துவிட்டார்.

அங்கு இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர். சித்ராவின் மகளுக்கு 16 வயது ஆகிறது. இந்நிலையில், சித்ராவின் மகளுக்கு முருகன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், முருகனுக்கும், சித்ராவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சித்ரா புகார் அளித்தார். அதன்பேரில், முருகனையும், சித்ராவையும் காவல் நிலையத்துக்கு அழைத்து போலீஸார் நேற்று விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்து வெளியே வந்தபோது, காவல் நிலையம் அருகில் முருகனுக்கும், சித்ராவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த முருகன், கத்தியால் சித்ராவை சரமாரியாக குத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டார்.

நடு ரோட்டில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரத்த வெள்ளத்தில் சரிந்த சித்ரா, உடனடியாக ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

ஆனால், வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஆலங்குளம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக இருந்த முருகனை போலீஸார் இன்று கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x