Published : 30 Jul 2020 10:13 AM
Last Updated : 30 Jul 2020 10:13 AM
நாட்டு வெடி குண்டு வீசிய வழக்கில் தேடப்பட்ட 3 பேரை போலீஸார் பிடிக்க முயன்றபோது, மாடியில் இருந்து குதித்ததில் 3 பேருக்கும் கால் எலும்பு முறிந்தது.
சிவகங்கை மாவட்டம் தாணிச்சாவூரணியைச் சேர்ந்தவர் ராஜபாண்டி (26). இவரது வீட்டில் கடந்த 21-ம் தேதி நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு 3 பேர் தப்பினர். இதில், ராஜபாண்டியின் தாய் சித்ரா பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய ஆறாவயல் போலீஸார், விஜயகுமார், மதிபாலா, முத்துராமலிங்கம் ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த 26-ம் தேதி தருமபுரி அடுத்த தொப்பூர் பகுதியில் இருந்த முத்துராமலிங்கம் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் பிடிக்க முயன்றபோது, அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தை அங்கு விட்டுவிட்டு தப்பினர்.
இந்நிலையில், தப்பிய மூவரும் சேலத்தில் உள்ள அவர்களது நண்பர் வீட்டில் தங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று அதிகாலை சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அங்கம்மாள் காலனி பகுதியில் உள்ள கட்டிடத்தில் பதுங்கியிருந்த விஜயகுமார், மதிபாலா, முத்துராமலிங்கம் ஆகியோரை பிடிக்க தனிப்படை போலீஸார் கட்டிடத்தை சுற்றி வளைத்தனர். அப்போது, மூவரும் மாடியில் இருந்து குதித்தபோது, சாக்கடையில் விழுந்து மூன்று பேருக்கும் இடுப்பு மற்றும் கால் எலும்பு முறிந்தது. அவர்களை போலீஸார் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மேலும், 3 பேரையும் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT