Published : 03 Feb 2020 05:06 PM
Last Updated : 03 Feb 2020 05:06 PM

வேடசந்தூர் அருகே பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி படுகொலை செய்யப்பட்டதாகப் புகார்: உறவினர்கள் சாலை மறியல்

திண்டுக்கல் அரசு மருத்துவமனைமுன்பு மறியலில் ஈடுபட்ட இறந்த சிறுமியின் உறவினர்கள்

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதாகக் கூறி உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்த மில் தொழிலாளியின் 6 வயது மகள் அங்குள்ள அரசு பள்ளியில் முதலாம் வகுப்பு படித்துவந்தார்.

நேற்று மாலை வீட்டில் இருந்து விளையாடிவிட்டு வருவதாக கூறிச்சென்றவர் வீடு திரும்பவில்லை. பெற்றோர் தேடிச்சென்றதில் ஊருக்கு வெளியேயுள்ள தனியார் தோட்டத்தில் காயங்களுடன் இறந்துகிடந்தார். தகவலறிந்த கூம்பூர் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.

சிறுமியின் உடலை வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். முதற்கட்ட பரிசோதனைக்குப் பின், அங்கிருந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். சிறுமியின் உடலில் காயங்கள் இருந்ததால், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டாரா என்ற நோக்கில் போலீஸார் விசாரணையைத் தொடர்ந்தனர். சிறுமியுடன் விளையாடிய சிறுவர்கள் இருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் இன்று காலை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்த சிறுமியின் உறவினர்கள், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என குற்றம்சாட்டி, கொலையாளிகளை உடனே கைது செய்யவேண்டும் என வலியுறுத்தி திண்டுக்கல் அரசு மருத்துவமனைமுன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அங்குவந்த திமுக மாநில துணைப்பொதுச்செயலாளர் இ.பெரியசாமி எம்.எல்.ஏ., வேடசந்தூர் எம்.எல்.ஏ., பரமசிவம் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் குற்றவாளிகளை கைது செய்யவும், உரிய நடவடிக்கை எடுக்க துணைநிற்பதாக தெரிவித்தனர்.

தொடர்ந்து அரசுமருத்துவமனை கண்காணிப்பாளர் சுரேஷ்பாபுவிடம் சிறுமியின் பிரேதபரிசோதனையை முறையாக செய்து உண்மையை வெளிக்கொண்டுவரவேண்டும் என கேட்டுக்கொண்டனர். திண்டுக்கல் நகர் டி.எஸ்.பி., மணிமாறன் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோகச்செய்தார்.

மறியலால் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இறந்த சிறுமியின் உறவினர்கள் கூறுகையில், "சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது சந்தேகத்திற்கிடமின்றி தெரிகிறது. குழந்தையின் பெற்றோரை விசாரணைக்கு போலீஸார் அழைத்துச்சென்றவர்கள் இதுவரை விடுவிக்கவில்லை. குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்றனர்.

இதற்கிடையில் இவ்விவகாரம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x