Published : 18 Jan 2020 10:10 AM
Last Updated : 18 Jan 2020 10:10 AM
தூத்துக்குடி - மதுரை நெடுஞ்சாலை தேசிய நெடுஞ்சாலையில் கன்டெய்னர் லாரி எதிரே வந்த காருடன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சென்னையைச் சேர்ந்த 4 பேர் பலியாகினர்.
தூத்துக்குடி - மதுரை நெடுஞ்சாலை தேசிய நெடுஞ்சாலையானது எப்பொழுதும் பரபரப்பாக காணப்படக்கூடிய சாலை. இந்த சாலையின் வழியே சரக்கு போக்குவரத்துக்காக பெரிய கன்டெய்னர்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் மற்றும் கனரக வாகனங்களின் போக்குவரத்து அதிக அளவில் இருக்கும்.
இந்நிலையில் நேற்றிரவு 11.30 மணியளவில் தூத்துக்குடியில் இருந்து கன்டெய்னர்களில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு மதுரைக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
ஸ்டெர்லைட் ஆலை பகுதியின் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக கன்டெய்னர் லாரி எதிரே வந்த காருடன் நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் காரில் வந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து காரணமாக தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
தகவல் அறிந்து தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் இறந்தவர்களின் உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் இறந்த 4 பேரும் சென்னையைச் சேர்ந்த நீரேந்திரன், ரம்யா, ரம்யாவின் தோழி பார்கவி மற்றும் ஓட்டுநர் ஜோகன் ஆகியோர் எனத் தெரிய வந்துள்ளது.
இவர்கள், திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக காரில் வந்தபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது.
விபத்து தொடர்பாக கன்டெய்னர் லாரி ஓட்டுநர் சந்திரசேகரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT