Last Updated : 28 Dec, 2019 09:34 PM

 

Published : 28 Dec 2019 09:34 PM
Last Updated : 28 Dec 2019 09:34 PM

புதுக்கோட்டையில் வாக்குப் பெட்டியை கடத்திய நபர்மீது  குண்டர் சட்டம் பாய்ந்தது

புதுக்கோட்டை

கே.சுரேஷ்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவூர் அருகே வாக்குச்சாவடிக்குள் புகுந்து வாக்குப் பெட்டி தூக்கிச்சென்ற நபரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க ஆட்சியர் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உள்ளாட்சித்தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்றுக்காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றியம் வெம்மணி ஊராட்சியும் ஒன்று. இங்குள்ள பெரிய மூலிப்பட்டியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது.

அமைதியாக வாக்குப்பதிவு நடந்துக்கொண்டிருந்தது அப்போது இரு வேட்பாளர்களுக்கு இடையேயான விரோதத்தில் அதே ஊரைச் சேர்ந்த து.மூர்த்தி(19) உட்பட சிலர் திடீரென வாக்குச்சாவடிக்குள் புகுந்து வாக்குப் பெட்டியை தூக்கிச் சென்றனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், போலீஸார் தேடிச் சென்று வாக்குப்பெட்டியை பத்திரமாக மீட்டு வந்தனர்.

சம்பவம் நடந்த வாக்குச்சாவடிக்கு புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் சக்தி குமார், இலுப்பூர் கோட்டாட்சியர் டெய்சிகுமார் உள்ளிட்டோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். வாக்குப்பெட்டி அதன் சீல் உடைக்கப்படாமல் மீட்கப்பட்டது.

இதையடுத்து வேட்பாளர்கள் மற்றும் முகவர்களிடம் அதே வாக்குப்பெட்டியை வைத்து வாக்குப்பதிவை தொடரலாமா? என கருத்துக் கேட்கப்பட்டதில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்காததால் தூக்கி செல்லப்பட்ட அதே வாக்குப்பெட்டியை வாக்கு எண்ணும் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் அங்கு மறுவாக்குப் பதிவு நடத்துவதற்கான தேவை ஏற்படவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக மண்டையூர் போலீஸார் அதே பகுதியைச் சேர்ந்த மூர்த்தி, கருப்பையா, சரவணன் மற்றும் ஐயப்பன் ஆகிய 4 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். 3 பேர் தலைமறைவான நிலையில், மூர்த்தியை கைது செய்தனர். தலைமறைவாகிய 3 பேரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் வாக்குச்சாவடிக்குள் சட்டவிரோதமாக புகுந்து வாக்குப்பெட்டியை தூக்கிச் சென்ற மூர்த்தியை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி உத்தரவு பிறப்பித்தார்.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் விதி மீறல் தொடர்பாக கைதானவர்களில் முதல் முறையாக புதுக்கோட்டையில் ஒருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x