Published : 24 Dec 2019 02:35 PM
Last Updated : 24 Dec 2019 02:35 PM

குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து பேரணி: ஸ்டாலின், வைகோ, சிதம்பரம் உள்ளிட்ட 8,000 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு

சென்னை

குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து நேற்று பேரணி நடத்திய திமுக தலைவர் ஸ்டாலின், வைகோ, ப.சிதம்பரம், கே.பாலகிருஷ்ணன் உள்பட 8,000 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்திலும் இச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. கடந்த 17-ம் தேதி தமிழகம் முழுவதும் திமுக இச்சட்டத்தை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.

இதையடுத்து 23-ம் தேதி சென்னையில் எதிர்க்கட்சிகளின் கண்டன பேரணி நடத்தப்படும் என, திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. பேரணிக்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். தடையை மீறி பேரணி நடத்த திமுக முடிவெடுத்தது.

இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் பேரணிக்குத் தடை விதிக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 22-ம் தேதி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. உயர் நீதிமன்றம் பேரணிக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது.

“ஜனநாயக நாட்டில் யாரும் போராட்டம் நடத்தலாம். தடை விதிக்க முடியாது. திமுகவின் பேரணியில் சட்டம் ஒழுங்கை காவல்துறை உறுதி செய்ய வேண்டும். திமுக பேரணியின் போது காவல்துறை ட்ரோன் கேமரா மூலம் வீடியோ பதிவு செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாது என்பதை காவல்துறை உறுதி செய்ய வேண்டும். நிபந்தனைகளை மீறினால் வீடியோ பதிவு செய்யுங்கள்” என நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் 23-ம் தேதி (நேற்று) திமுக பேரணி அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடந்தது. இந்தப் பேரணியில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், அக்கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநிலச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், ஐஜேகே மாநிலப் பொதுச் செயலாளர் ஜெயசீலன், திமுக தொண்டர்கள், நிர்வாகிகள், கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், பல்வேறு அணியினர் கலந்துகொண்டனர்.

திமுக தலைமையிலான இந்தப் பேரணி திட்டமிட்டபடி வெற்றிகரமாக அமைதியாக நடந்து முடிந்தது. தற்போது பேரணியில் காவல் துறையின்தடையை மீறி கலந்துகொண்ட, பேரணியை நடத்திய திமுக தலைவர் ஸ்டாலின், ப.சிதம்பரம், வைகோ, கே.பாலகிருஷ்ணன்,முத்தரசன், ஜவாஹிருல்லா, காதர் மொய்தீன் உள்ளிட்ட திமுக மற்றும் தோழமைக்கட்சிகளின் தொண்டர்கள் 8,000 பேர் மீது சென்னை காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

அனைவர் மீதும் பிரிவு ஐபிசி பிரிவு 143 (சட்டவிரோதமாக கூடுதல்), 188 (அரசு உத்தரவுக்குக் கீழ்படிய மறுத்தல்), 341 (முறையற்ற முறையில் செயல்பட விடாமல் தடுப்பது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சேகரித்துள்ள காட்சிப் பதிவுகள் உள்ளிட்ட விவரங்களுடன் நீதிமன்ற விசாரணையில் தாக்கல் செய்வார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x