Published : 23 Dec 2019 08:01 PM
Last Updated : 23 Dec 2019 08:01 PM
சிவகங்கை அருகே சாலையோரத்தில் டன் கணக்கில் காலாவதியான மருந்து பாட்டில்களை கொட்டிய வாகனத்தை கிராம மக்கள் சிறை பிடித்தனர்.
இதுகுறித்து வருவாய் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 17 அரசு மருத்துவமனைகள், 52 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 275 துணை சுகாதார நிலையங்கள் உள்ளன. இதுதவிர சிவகங்கை, காரைக்குடி, சிங்கம்புணரி, மானாமதுரை ஆகிய 4 இடங்களில் இ.எஸ்.ஐ மருந்துவமனைகள் உள்ளன.
இந்நிலையில் இன்று காலை சிவகங்கை-மானாமதுரை சாலையோரத்தில் சுந்தரநடப்பு அருகே சரக்கு வாகனத்தில் இருந்து டன் கணக்கில் காலாவதியான கெட்டுபோன மருந்து பாட்டில்களை கொட்டினர்.
இதை பார்த்த அப்பகுதி மக்கள் வாகனத்தை சிறைபிடித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறையினர் மருந்து பாட்டில்களை கொட்டியவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதில் சிவகங்கை இஎஸ்ஐ மருத்துவமனையில் இருந்து கொண்டு வரப்பட்டது என்பதும், அனைத்தும் விலையுயர்ந்த மருந்துகள் என்பதும் தெரியவந்தது.
மேலும் ஏற்கெனவே இரண்டு லோடு மருந்து பாட்டில்களை சுந்தரநடப்பில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டியுள்ளனர். நகராட்சி ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மூன்றாவது லோடை சாலையோரத்தில் கொட்டியுள்ளனர்.
கிராமமக்கள் எதிர்ப்பை அடுத்து கொட்டிய மருந்துகளை மீண்டும் வாகனத்திலேயே ஏற்றிச் சென்றனர். ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்பு,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இ.எஸ்.ஐ மருத்துவமனையில் இருந்து காலாவதி ஆகாத மருந்து, மாத்திரைகள் கொட்டியதாக புகார் எழுந்தது. தற்போது சிவகங்கை அருகே டன்கணக்கில் மருந்து பாட்டில்களை கொட்டியது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT