Published : 19 Dec 2019 01:02 PM
Last Updated : 19 Dec 2019 01:02 PM
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அ.வல்லாளபட்டியை சேர்ந்த முன்னாள் கூட்டுறவு சங்க தலைவரும், தற்போது அமமுக கட்சி பிரதிநிதியாக உள்ள அசோகன் மர்ம கும்பலால் இன்று (வியாழக்கிழமை) காலை படுகொலை செய்யப்பட்டார்.
இதனையடுத்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் அசோகன் வழக்கம் போல இன்று காலை அழகர்கோவில் சாலையில் நடைபயிற்சி சென்றார். அப்போது 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அசோகனை சரமாரியாகத் தாக்கியுள்ளது. இதில் அசோகன் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
இது குறித்த தகவலறிந்த மேலூர் டி.எஸ்.பி சுபாஷ் தலைமையிலான போலீஸார் உடலை கைப்பற்றி மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனைக்கு உடலை கொண்டு செல்ல மேலூர் போலீஸார் முற்பட்ட போது உறவினர்கள் தடுத்து காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு முற்றுகையிட்டனர். இதனால் அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் கொலைக் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி மேலூர் பேருந்து நிலையம் முன்பு அ.வல்லாளபட்டியை சேர்ந்த அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் 1 மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் பள்ளி, கல்லூரி வாகனங்கள் மற்றும் பேருந்துகள் செல்ல முடியாமல் கடும் பாதிப்பு ஏற்பட்டது. போலீஸார் பேச்சு வார்த்தைக்குப் பின்னரே மறியல் கைவிடப்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த கொலை சம்பவம் குறித்து டி.எஸ்.பி சுபாஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர். மேலும் குற்றச் சம்பவம் நிகழ்ந்த இடத்திலுள்ள நீர்நிலையில் கிடந்த கத்தி ஒன்றினை போலீஸார் மீட்டுள்ளனர். முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT