Published : 19 Dec 2019 12:14 PM
Last Updated : 19 Dec 2019 12:14 PM
தூத்துக்குடி அருகே பாலியல் பலாத்காரத்தால் மாணவிக்கு பிறந்த குழந்தை கொன்று புதைக்கப்பட்ட விவகாரத்தில், அந்த குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.
தூத்துக்குடி அருகேயுள்ள முடிவைத்தானேந்தல் கீழத்தெருவைச் சேர்ந்த டி.வி. மெக்கானிக் ராஜூ (48). இவர் அப்பகுதி திமுக கலை இலக்கிய பிரிவு துணை அமைப்பாளராக உள்ளார். இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானார். இந்நிலையில் அந்த சிறுமிக்கு 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் குழந்தை பிறந்தது.
அந்தக் குழந்தையை மாணவியின் குடும்பத்தினர் வீட்டின் பின்புறத்தில் புதைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து ராஜூவை கைது செய்தனர். மேலும் குழந்தை உயிருடன் புதைக்கப்பட்டதா? என சிறுமியின் குடும்பத்தினரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், புதைக்கப்பட்ட குழந்தையின் உடல் நேற்று மதியம் 1 மணியளவில் தூத்துக்குடி தாசில்தார் செல்வகுமார், வருவாய் ஆய்வாளர் அமுதா, கிராம நிர்வாக அதிகாரி ஆரோக்கிய பாத்திமா ராணி, ஆகியோர் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது.
தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் பிரதாபன், உதயகுமார் ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை நடத்தினர்.
சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற பரிசோதனைக்கு பின்னர் உடல் மாணவியின் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து புதுக்கோட்டை போலீ்ஸார் பள்ளி மாணவியின் தாயாரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் பெண் சிசுவை மண்வெட்டியால் தலையில் அடித்து கொன்றதை ஓப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார் இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலியல் பலாத்காரத்தால் மாணவிக்கு பிறந்த குழந்தை புதைக்கப்பட்ட விவகாரத்தில் திருப்புமுனையாக பெண் சிசுவை மண்வெட்டியால் தலையில் அடித்து கொல்லபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையொட்டி அந்த கிராம மக்கள் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT