Published : 03 Dec 2019 03:35 PM
Last Updated : 03 Dec 2019 03:35 PM
மின் கம்பி அறுந்து விழுந்து பெண் பலியானது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
செங்குன்றம் அருகே பவானி நகரை சேர்ந்தவர் ராஜவேலு (40). இவர் அரிசி மண்டி வைத்துள்ளார். இவரது மனைவி காவேரி (35). இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மாதம் 26-ம் தேதி வழக்கம்போல், மகனைப் பள்ளிக்கு அனுப்புவதற்காகத் தயார் செய்த காவேரி, பள்ளி வேனுக்காக வீட்டிற்கு வெளியே மகனுடன் காத்திருந்தார்.
அவருடன் கணவர் ராஜவேலு, அவரது தாயார் பத்மா (60) ஆகியோரும் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக மேலே சென்றுகொண்டிருந்த மின்சார வயர் அறுந்து காவேரி, அவரது மகன், மாமியார் பத்மா ஆகியோர் மீது விழுந்தது.
இதில், மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட காவேரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அருகில் நின்று கொண்டிருந்த மகன் , மாமியார் பத்மா மீது மின் வயர் உரசியதில் இருவரும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது மின்சார வாரியத்தின் அலட்சியத்தாலேயே நடந்தது. இதற்கு முன்னர் இதேபோன்று கம்பி அறுந்து விழுந்து 2 மாடுகள் உயிரிழந்தபோது இற்றுப்போன கம்பிகளை மாற்றச் சொன்னோம். ஆனால், அதிகாரிகள் கண்டுகொள்ளாததன் விளைவே இந்த விபத்து என பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்தச் செய்தி தமிழ் நாளிதழ்களில் வெளியானது.
இச்சம்பவம் தொடர்பாக நாளிதழில் வந்த செய்தியின் அடிப்படையில், மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கை விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன், மின் கம்பி அறுந்து உயிரிழந்தது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர், நிர்வாக இயக்குனர் ஆகியோர் 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
தவறும் பட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீஸில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT