Published : 03 Oct 2019 05:57 PM
Last Updated : 03 Oct 2019 05:57 PM

திருச்சி நகைக்கடை கொள்ளை; 24 மணிநேரம் கடந்த பின்னும் துப்பு கிடைக்கவில்லை: போலீஸ் தீவிர விசாரணை

திருச்சி

திருச்சி நகைக்கடையில் ரூ.13 கோடி மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற கும்பலைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் 24 மணிநேரம் கடந்த நிலையிலும் கொள்ளையர்கள் குறித்து தெளிவான தகவல் கிடைக்காத நிலையில் விசாரணை தொடர்கிறது.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் பரபரப்பான இடத்தில் அமைந்துள்ள லலிதா ஜுவல்லரி நகைக்கடைக்குள் நள்ளிரவில் சுவரில் துளையிட்டு நுழைந்த முகமுடி கும்பல் கீழ்த்தளத்தில் உள்ள சுமார் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர நகைகளை திருடிச் சென்றது. வெகு ஜாக்கிரதையாக ஆங்கிலப் படப் பாணியில் முகமூடி, முழுதாக கவர் செய்யப்பட உடை, கையுறை என அந்தக் கும்பல் நேர்த்தியாக கொள்ளையடித்துச் சென்றது.

கொள்ளை தொடர்பாக விசாரணை நடத்த 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. திருச்சி மட்டுமல்லாது, பக்கத்து மாவட்டங்களில் உள்ள தங்கும் விடுதிகளிலும் தனிப்படை போலீஸார் தீவிரமாகத் தேடுதல் நடத்தினர். கொள்ளை நடந்த விதத்தை வைத்து வடமாநிலக் கொள்ளையர்கள் கைவரிசையாக இருக்கலாம் என சந்தேகித்தனர்.

அக்கம் பக்கம் உள்ள தங்கும் விடுதிகளில் சோதனையிட்டபோது வடமாநிலத்தைச் சேர்ந்த 6 பேர் விடுதியைக் காலி செய்துவிட்டு புதுக்கோட்டைக்குச் சென்றதாக தகவல் வெளியானதை ஒட்டி போலீஸார் அங்கு பறந்து சென்றனர். புதுக்கோட்டையில் உள்ள டைமண்ட் தங்கும் விடுதியில் தங்கியிருந்த வட மாநிலத்தவர் அறையைச் சுற்றி வளைத்தனர்.

உள்ளே இருந்த 5 பேரைப் பிடித்தனர். அப்போது வெளியில் உணவு வாங்கிவிட்டு அறைக்குத் திரும்பிய அப்துல்லா சேக் என்பவர் போலீஸாரைப் பார்த்து தப்பிக்க 2-வது மாடியில் இருந்து குதித்தபோது அவருக்குக் காயம் ஏற்பட்டது. தலையில் அடிபட்ட அவரை மீட்ட போலீஸார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

போலீஸ் விசாரணையில் அவர்கள் கம்பளி போர்வை விற்பவர்கள் என்றும் ஊர் ஊராகப் போய் விற்பவர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்களிடம் எதையும் கைப்பற்றாத நிலையில் அவர்களை விடுவித்த போலீஸார் கண்காணிப்பிலேயே வைத்துள்ளனர்.

கொள்ளை நடந்த லலிதா ஜுவல்லரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலவீனமாக இருந்துள்ளது. கட்டிடத்தைச் சுற்றி ரோந்துப் பணிகள் எதுவும் இல்லாததும், ஒன்றரை அடி உயர சுவரை ஒரு ஆள் நுழையும் அளவுக்குத் துளையிடும் நேரம், துளையிடும் சத்தம் எதையுமே காவலர்கள் அறியாதது பெரிய பாதுகாப்பு இழப்பாகப் பார்க்கப்படுகிறது.

இந்த வகையில் கொள்ளையடிக்கக்கூடியவர்கள் வடமாநிலக் கொள்ளையர்கள் என்பதால் கடந்த ஜனவரி மாதம் சமயபுரத்தில் வங்கியின் சுவரில் துளையிட்டுக் கொள்ளையடித்தவர்களின் தொடர் குற்றச்செயல்களாக போலீஸார் கருதுகின்றனர். 9 மாதமாகியும் பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளையில் கொள்ளையடித்தவர்கள் பிடிபடாத நிலையில் மீண்டும் கொள்ளையர்கள் துணிவுபெற்று இந்தச் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளதாக போலீஸார் கருதுகின்றனர்.

இந்தச் சம்பவத்தில் கொள்ளையர்கள் குறித்து கிடைத்துள்ள ஒரே துப்பு சிசிடிவி காட்சிகள் மட்டுமே. கொள்ளையர்கள் அணிந்திருந்த உடைகள், முகமூடி உள்ளிட்டவற்றை அவர்கள் புதிதாக அருகிலுள்ள கடைகளில் வாங்கியிருக்க வேண்டும் என்பதால் திருச்சியில் உள்ள முக்கியமாக குழந்தைகள் முகமூடிகளை விற்பனை செய்யும் கடைகளில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொள்ளையர்கள் கடையின் உள்ளே கொள்ளையடிக்கும் காட்சிகள் மட்டுமே கிடைத்துள்ள நிலையில் கட்டிடத்திற்கு வெளியே எத்தனை பேர் இருந்தனர், கொள்ளையர்கள் என்ன வாகனத்தில் வந்தனர்? போன்றவை குறித்தோ, ஜுவல்லரி கட்டடத்திற்கு வெளியில் எத்தனை கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன? அவை இயங்குகின்றனவா? என்பது குறித்தோ போலீஸாரிடம் பதிலில்லை.

ஒன்றரை அடி தடிமன் உள்ள சுவரை இரண்டுபேர் ஒரே நாள் நள்ளிரவில் சில மணிநேரத்தில் துளையிட வாய்ப்பில்லாதபோது அவர்கள் பல நாட்கள் இந்த வேலையைச் செய்திருக்க வாய்ப்புள்ளது. கட்டிடத்தின் பின்புறம் கட்டிடச் சுவருக்கு வெளியில் மறைப்பாக ஒரு சுவர் உள்ளது. அந்த இடத்தைத் தேர்வு செய்து துளையிட்டுள்ளனர்.

அதைக் கண்காணிக்க உரிய ஆட்கள் இல்லாமல் கட்டிடப் பாதுகாப்பு இருந்துள்ளது. சுவரில் துளை போட பல மணி நேரம் ஆகும், இரவில் துளை போட்டால் வெளியில் சத்தம் கேட்கும். அதனால் பகலில் போட்டிருப்பார்கள். பகலில் துளை போட்டால் கட்டிடத்தின் உள்ளே சுவரை உடைக்கும்போது ஊழியர்களுக்குத் தெரியும். அதையும் மீறி ஊழியர்கள் அறியாவண்ணம் உடைக்கப்பட்டிருக்கிறது என்றால் கடைக்குள்ளே வேலை செய்யும் ஊழியர் உதவாமல் செய்ய வாய்ப்பில்லை என போலீஸார் கருதுகின்றனர்.

நகைக்கடைக்குள் கொள்ளை அடிக்கும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் காலில் கயிற்றைக் கட்டிக்கொண்டு உள்ளே வந்து கொள்ளை அடிப்பது தெரிகிறது. வெளியே உள்ளவர்கள் கயிற்றைக் காலில் கட்டி, பிடித்து நிற்க ஆட்கள் யாராவது வந்தால் கயிற்றை இழுத்து உஷார்படுத்த இருக்கலாம் எனத் தெரிகிறது. கொள்ளையடிப்பவர்கள் ஸ்டைலைப் பார்க்கும்போது அவர்கள் தேர்ந்த கொள்ளையர்களாக இருப்பது தெரிகிறது. இருவரின் உயரமும் வடமாநில நபர்கள் போல் உள்ளது.

புதுக்கோட்டையில் பிடிபட்ட நபர்களையும் போலீஸார் விசாரணை வளையத்தில் வைத்துள்ளனர். பல கோணங்களில் உள்ளே, வெளியே நடந்த சம்பவங்கள், பேருந்து நிலையம், ரயில் நிலையம், வாகன ஸ்டாண்ட், கடைகள் , சாலையோரக் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்வது என பல்வேறு வகைகளில் விசாரணை நடக்கிறது. இரண்டு நாட்களில் கொள்ளையர்களைப் பிடித்துவிடுவோம் என போலீஸ் உயர் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x