Published : 16 Sep 2019 04:51 PM
Last Updated : 16 Sep 2019 04:51 PM
திருநெல்வேலி
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (திங்கள்கிழமை) மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மதியம் 12.30 மணியளவில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஒருவர், குறைதீர் கூட்ட அரங்கம் அருகில் வந்தார். அவர், திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மற்றும் தீயணைப்புப் படையினர் உடனடியாக விரைந்த சென்று, அவரது தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தினர்.
அவர் மீது தண்ணீரை ஊற்றி, மண்ணெண்ணெய்யை கழுவினர். பின்னர், அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், ஆலங்குளம் அருகே உள்ள உக்கிரன்கோட்டையைச் சேர்ந்த போதர் என்பதும், அவர் விவசாயம் செய்து வருவதும் தெரியவந்தது.
அவர் கூறும்போது, “மானூர் அருகே உள்ள வாள்வீச்சு ரஸ்தா பகுதியில் எனது மனைவி பெயரில் மூன்றரை சென்ட் இடம் உள்ளது. அந்த இடத்தை ஒருவர் ஆக்கிரமித்து இருந்தார். இது தொடர்பாக மானூர் வட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புகார் அளித்திருந்தேன். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில், ஆக்கிரமித்த நிலத்தில் அந்த நபர் வீடு கட்ட ஆரம்பித்துள்ளார். இதனால், மீண்டும் அதிகாரிகளிடம் புகார் அளித்தேன். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள வந்தேன். நுழைவு வாயிலில் போலீஸார் சோதனையிட்டதால், மண்ணெண்ணெய் கேனுடன் காம்பவுண்ட் சுவரில் ஏறிக் குதித்து, ஆட்சியர் அலுவலகத்துக்குள் வந்து தீக்குளிக்க முயன்றேன்” என்றார்.
இதையடுத்து, அவரை பாளையங்கோட்டை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் கந்துவட்டிக் கொடுமையால் தனது மனைவி, 2 குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, ஆட்சியர் அலுவலகத்தின் 2 நுழைவு வாயில்கள் தவிர மற்ற அனைத்து நுழைவு வாயில்களும் அடைக்கப்பட்டன.
மக்கள் குறைதீர் கூட்டம் நடக்கும் நாட்களில் கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, பொதுமக்கள் அனைவரையும் தீவிர சோதனை நடத்திய பிறகே ஆட்சியர் அலுவலகத்துக்குள் செல்ல அனுமதிக்கின்றனர்.
இருப்பினும் ஆட்சியர் அலுவலகத்தில் அவ்வப்போது தற்கொலை முயற்சி சம்பவங்கள் நடக்கின்றன. இந்நிலையில், முதியவர் ஒருவர் காம்ப்பவுண்ட் சுவரில் ஏறிக்குறித்து ஆட்சியர் அலுவலகத்துக்குள் சென்று, தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
-த.அசோக்குமார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT