Published : 12 Sep 2019 04:02 PM
Last Updated : 12 Sep 2019 04:02 PM
சென்னை
சென்னை நுங்கம்பாக்கத்தில் லேன்சன் டொயோட்டா கார் விற்பனையக பெண் இயக்குனர் திடீரென தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை கோயம்பேட்டில் லேன்சன் டொயோட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான மிகப்பெரிய கார் விற்பனையகம் உள்ளது. இதன் உரிமையாளர் லங்காலிங்கம் (54). இவர் இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக உள்ளார். இந்நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவராக லங்காலிங்கத்தின் மனைவி ரீட்டா ஜானகி (50) உள்ளார்.
லங்காலிங்கமும் அவரது மனைவி ரீட்டா ஜானகியும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கோத்தாரி சாலையில் வசித்து வருகின்றனர். இவர்கள் சொந்த ஊர் திருச்செந்தூர் அருகே உள்ள ராணி மகாராஜபுரம் ஆகும். கணவர் லங்காலிங்கம் நேற்றிரவு வீட்டில் தங்கவில்லை. இந்நிலையில் இன்று காலையில் விழித்தெழவேண்டிய ரீட்டா ஜானகி அறையைவிட்டு வெளியே வரவில்லை.
வீட்டின் பணிப்பெண் காலை 9 மணியளவில் ரீட்டாவின் அறைக்குச் சென்று பார்த்தார். அப்போது தூக்கில் பிணமாகத் தொங்கிய நிலையில் ரீட்டா இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தவர், வீட்டின் சூப்பர்வைசர் ஏசுபாதம் (54) என்பவரிடம் சம்பவத்தைக் குறிப்பிட்டார். பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் ரீட்டாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தற்கொலை தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கார் விற்பனையக நிறுவனத்தின் இயக்குனராக இருப்பதால் சமீபத்தில் நடந்த கூட்டத்தில் நிர்வாகிகளை ரீட்டா கடுமையாக கடிந்து கொண்டதாகவும், அதன் காரணமாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான கணவர் லங்கலிங்கத்திற்கும் அவருக்கும் சிறிது மனத்தாங்கல் இருந்ததாகவும், அதன் காரணமாக லங்காலிங்கம் வீட்டிற்கு வராத நிலையில் மனம் உடைந்து தற்கொலை செய்திருக்கலாம் என்றும் போலீஸார் கருதுகிறார்கள்.
ஆனால், தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை விசாரணையில் வெளிவரவில்லை. கணவர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்திய பின்னரே காரணம் தெரியவரும்.
பாரம்பரியமாக தொழிற்துறையில் சிறந்து விளங்கும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT