Published : 11 Sep 2019 06:26 PM
Last Updated : 11 Sep 2019 06:26 PM
சென்னை,
குன்றத்தூர் அருகே நண்பருடன் மோட்டார் சைக்கிள் ஓட்டப் பழகிய இளம்பெண், பைக் கட்டுப்பாட்டை இழந்ததில் சாலைத் தடுப்பில் மோதி உயிரிழந்தார்.
குன்றத்தூரை அடுத்த கோவூர் பகுதியில் வசித்தவர் அபிநயா (20). இவர் ஐயப்பன்தாங்கலை அடுத்துள்ள காட்டுப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். வேலைக்குச் செல்லும்போது வழியில் பூந்தமல்லி, கரையான்சாவடியைச் சேர்ந்த அண்ணாமலை (21) என்ற இளைஞருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நட்பு ரீதியாகப் பழகி வந்துள்ளனர்.
அண்ணாமலை அதிவேக மோட்டார் சைக்கிள் வைத்துள்ளார். அதில் இருவரும் வெளியில் செல்வது வழக்கம். இந்நிலையில் அபிநயா தான் வேலை பார்த்த நிறுவனத்திலிருந்து நின்றுவிட்டார். நேற்று வேலைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு, குன்றத்தூரில் நண்பர் அண்ணாமலையைச் சந்தித்துள்ளார்.
பின்னர் அபிநயா, அண்ணாமலை இருவரும் மோட்டார் சைக்கிளில் குன்றத்தூர் பிரதான சாலையில் சென்றுள்ளனர். அப்போது அபிநயாவுக்கு மோட்டார் சைக்கிள் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எழுந்துள்ளது. அண்ணாமலையிடம் தனது ஆர்வத்தைக் கூறியுள்ளார். அண்ணாமலையும் சம்மதித்து கியர் எப்படி போடுவது, கிளட்ச்சை எப்படி விடுவிப்பது, ஆக்ஸிலரேட்டரை எப்படி மெதுவாக முறுக்கி ஓட்டுவது எனப் பயிற்சி கொடுத்துள்ளார்.
அண்ணாமலை பயிற்சி கொடுத்த மோட்டார் சைக்கிள் அதிவேகத் திறன் கொண்டது. 6 நொடிகளில் 60 கி.மீ.வேகத்தை எட்டக்கூடிய சீறிப்பாயும் தன்மை கொண்ட பைக். அதைப் பயிற்சியே இல்லாத அபிநயாவிடம் கொடுத்து பின்னால் அண்ணாமலை அமர்ந்து ஓட்டச்சொல்லி பயிற்சி அளித்துள்ளார்.
குன்றத்தூர் நெடுஞ்சாலையில் சிக்கராயபுரம் அருகே மோட்டார் சைக்கிள் வேகமாகச் செல்லும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படுகிறது. ஆக்ஸிலேட்டரை வேகமாக அபிநயா முறுக்கியதால் கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையின் தடுப்பு சுவரில் உள்ள கம்பியின் மீது மோதியது. இதில் அபிநயாவுக்கு முகம், தலை மற்றும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த அண்ணாமலையின் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.
சாலை விபத்தில் இளம்பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் காயத்துடன் கிடந்த அண்ணாமலையை மீட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த அபிநயாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மோட்டார் சைக்கிளை அபிநயா ஓட்டினாரா? அல்லது அண்ணாமலை ஓட்டி விபத்து ஏற்பட்டதா? என்கிற கோணத்தில் போலீஸார் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT