Published : 11 Sep 2019 03:13 PM
Last Updated : 11 Sep 2019 03:13 PM
கோவை
கோவையில் பெண்ணிடம் ஆபாசமாகப் பேசியதாக காவலர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கோவை பெரியநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த 35 வயதுப் பெண் நேற்று கீரணத்தம் பகுதியில் உள்ள தனது உறவினர்களைப் பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அத்திப்பாளையம் அடுத்துள்ள டாஸ்மாக் கடை அருகே வந்தபோது காவலர் ஒருவர் சீருடையில் பின்தொடர்ந்து வருவதைக் கண்டு பயந்த அந்தப் பெண், வேகமாகச் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை முந்திச் சென்று வழிமறித்த காவலர், "எங்கே செல்கிறீர்கள், நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்," என பேசத் தொடங்கி பின் தவறாகப் பேசியுள்ளார்.
இதனால் அச்சமடைந்த அப்பெண், அத்திப்பாளையம் பகுதியிலுள்ள ஒரு பேன்சி ஸ்டோரில் தஞ்சம் அடைந்தார். அங்கும் வந்த காவலர், தகாத வார்த்தையில் பேசியுள்ளார். இதற்கிடையே, அப்பெண் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த அவரது கணவர் மற்றும் நண்பர்கள் காவலரைக் கண்டித்தபோது அவர் மது போதையில் இருப்பதும், அவர் பெயர் பிரபாகரன், பெரியநாயக்கன்பாளையம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளரின் வாகன ஓட்டுநர் எனவும் தெரியவந்தது
பின்னர், சீருடையில் இருப்பதால் அடிக்காமல் விடுகிறோம் என்று கூறி, காவலர் பிரபாகரனை கோவில்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் கூறும்போது, "சம்பந்தப்பட்ட காவலர் பிரபாகரன் இன்று (செப்.11) பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது," என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT