Published : 10 Sep 2019 03:10 PM
Last Updated : 10 Sep 2019 03:10 PM
பெங்களூரு
ஆன்லைன் உணவு விற்பனையில் முன்னணி நிறுவனமான ‘ஸ்விக்கி’ பெங்களூருவில் ‘ஸ்விக்கி கோ’ என்ற சேவையை கடந்த 04.09.19 அன்று தொடங்கியது. இந்த சேவை மூலம் வாடிக்கையாளர்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு டெலிவரி செய்ய முடியும் என்று அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.
ஆனால் இந்த சேவையைப் பயன்படுத்திய பெண் ஒருவர் கஸ்டமர் கேர் நம்பரை மாற்றி டயல் செய்ததால் 95,000 ரூபாயைப் பறிகொடுத்த சம்பவம் பெஙகளூருவில் நடந்தது.
பெங்களூரு இந்திரா நகரைச் சேர்ந்தவர் அபர்ணா. இவர் தன்னுடைய ஸ்மார்ட்போனை விற்க, ஓஎல்எக்ஸ் எனப்படும் தளத்தில் பதிவு செய்துவிட்டுக் காத்திருந்தார். அவரது எண்ணுக்கு பிலால் என்பவர் போன் செய்து அவரது ஸ்மார்ட்போனை வாங்கிக் கொள்வதாகக் கூறியுள்ளார். போன் கைக்கு வந்த பின்னர் பணத்தைச் செலுத்தி விடுவதாக பிலால் உறுதி அளித்ததும் அபர்ணா அந்த போனை பிலாலுக்கு அனுப்ப ’ஸ்விக்கி கோ’ சேவையைப் பயன்படுத்தியுள்ளார்.
சிறிது நேரத்தில் அபர்ணா குறிப்பிட்ட இடத்திலிருந்து போனை பெற்றுக் கொண்ட ஸ்விக்கி டெலிவரி ஆள் அங்கிருந்து கிளம்பிச் சென்றுள்ளார். இரவு 11 மணி அளவில் அபர்ணாவுக்குப் போன் செய்த பிலால் ஸ்விக்கி அந்த ஆர்டரை கேன்சல் செய்துவிட்டதாகவும் போன் தன்னிடம் வந்து சேரவில்லை என்றும் கூறியுள்ளார். உடனே அபர்ணா அந்த ’ஸ்விக்கி’ டெலிவரி நபருக்கு கால் செய்து கேட்டதற்கு நீங்கள் கொடுத்த முகவரி தவறாக இருந்ததால் ஆர்டர் கேன்சல் செய்யப்பட்டுவிட்டதாகவும் போன் அலுவலகத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
உடனே கூகுளுக்குச் சென்று ’ஸ்விக்கி’ கஸ்டமர் கேர் நம்பரைத் தேடி எடுத்துள்ளார். அந்த நம்பரைத் தொடர்புகொண்டு நடந்த சம்பவத்தைக் கூறியுள்ளார் அபர்ணா. மறுமுனையில் பேசிய நபர் தான் ஒரு லிங்க் அனுப்புவதாகவும் ரூ.3 மட்டும் செலுத்தி அதில் இந்தத் தகவல்களைக் கொடுக்குமாறு கூறியுள்ளார். அழைப்பைத் துண்டித்த அபர்ணா அந்த லிங்க்கை கிளிக் செய்துள்ளார். 3 ரூபாய் கட்டணம் செலுத்துவதற்காக அவரது வங்கிக் கணக்குகளைக் கொடுத்திருக்கிறார்.
சில நிமிடங்கள் கழித்து அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.95,000 எடுக்கப்பட்டிருப்பதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. அதிர்ந்து போன அபர்ணா மீண்டும் அந்த எண்ணுக்குத் தொடர்பு கொண்ட போது நாட் ரீச்சபிள் என்று பதில் கிடைத்திருக்கிறது.
உடனடியாக அருகில் இருந்த காவல் நிலையத்திற்குச் சென்று அபர்ணா புகார் அளித்துள்ளார். போலீஸார் விசாரித்ததில் அபர்ணா டயல் செய்த எண் ‘ஸ்விக்கி’ உடையதே இல்லை என்றும் அவர் எண்ணை மாற்றி செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.
அபர்ணாவிடமிருந்து 95,000 ரூபாயை அபேஸ் செய்தவர்கள் யார்? என்று போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT