Published : 05 Sep 2019 07:37 PM
Last Updated : 05 Sep 2019 07:37 PM

ஹெல்மெட் இல்லை, லைசென்ஸ் இல்லை, மதுபோதை: வாகன ஓட்டிக்கு ரூ.16 ஆயிரம் அபராதம் விதித்த தூத்துக்குடி நீதிமன்றம்

தூத்துக்குடியில் லைசென்ஸ் இன்றி, ஹெல்மெட் அணியாமல், மதுபோதையிலும் பைக் ஓட்டி வந்த நபருக்கு தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றம் ரூ.16 ஆயிரம் அபராதம் விதித்தது.

சாலைப் பாதுகாப்பை அதிகரிப்பது, விபத்துக்களை குறைப்பது ஆகியவற்றுக்காக கடும் அபராதங்களுடன் கூடிய புதிய மோட்டார் வாகனச் சட்டதிருத்த மசோதா கடந்த ஜூலை 31-ம் தேதி நிறைவேற்றியது இந்த மசோதாவுக்கு கடந்த மாதம் 9-ம் தேதி குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தார். கடந்த 1-ம்தேதி முதல் பெரும்பாலான மாநிலங்களில் புதிய மோட்டார் வாகனச் சட்டம் நடைமுறைக்க வந்துள்ளது.

அந்தந்த மாநிலங்கள் அதை ஆய்வு செய்து தங்கள் மாநிலத்தில் அமலாக்க அரசாணை வெளியிட வேண்டும். புதிய வாகனச் சட்டம் அமலுக்கு வந்ததுமுதல் வட மாநிலங்களில் போலீஸார், அதற்காகவே காத்திருந்ததுபோல் வாகன ஓட்டிகளிடம் பத்தாயிரக்கணக்கில் அபராதம் வசூலிக்கின்றனர்.

ஹரியானா மாநிலம் குருகிராமில் மொபட் ஓட்டிவந்து இளைஞர் போக்குவரத்து விதிகளை மீறியதால் அவருக்கு ரூ.23 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல, ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு ரூ.38 ஆயிரமும், ஒடிசாவில் ஒரு ஆட்டோ ஓட்டுநர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி, பல்வேறு விதிமுறை மீறல்கள் செய்ததால் அவருக்கு ரூ.47 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.

ஹரியாணாவில் டிராக்டர் ஓட்டுர் ஒருவருக்கு ரூ. 59 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோல் போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு கடும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய அரசின் சாலைப் பாதுகாப்பு மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு கிடைத்துள்ள தகவலின்படி, ஹரியாணா, ஒடிசா இரு மாநிலங்களில் மட்டும் போக்குவரத்து விதிமுறை மீறல் காரணமாக ரூ.1.40 கோடி அபராதமாக வசூலாகியுள்ளது எனத் தெரியவந்துள்ளது.

புதிய சட்டத்தின்படி மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம், அதிவேகமாக வாகனத்தை இயக்குவது மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி ஓட்டினால் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் மற்றும் ஓராண்டு சிறை தண்டனை, சீட் பெல்ட், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.1000, செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

தமிழ்நாட்டில் இது குறித்து அரசாணை வெளியிடப்படாததால் போக்குவரத்து போலீஸார் பழைய முறைப்படியே அபராதம் விதித்து வருகின்றனர். ஆனால் மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்றனர். கடந்த வாரம் மதுபோதையில் வாகனம் ஓட்டிய ஒருவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும், மற்றொருவருக்கு வேறொரு நீதிமன்றத்தில் 15 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது.

நேற்று தூத்துக்குடியில் லைசென்ஸ் இன்றி, ஹெல்மெட் அணியாமல், மதுபோதையிலும் பைக் ஓட்டி வந்த சண்முகநாதன் என்கிற நபர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் தூத்துக்குடி 2- வது குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன் ஆஜர்படுத்தினர். சண்முகநாதனுக்கு போதையில் ஓட்டியதற்கு ரூ.10 ஆயிரம், லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியதற்கு ரூ.5 ஆயிரம், ஹெல்மெட் அணியாததற்கு ரூ.1000 என மொத்தம் ரூ.16 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

வேறு வழியில்லாமல் அபராதத்தை சண்முகநாதன் செலுத்தி பைக்கை பெற்றுக்கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x