Published : 03 Sep 2019 05:22 PM
Last Updated : 03 Sep 2019 05:22 PM

தனுஷ் பட பாணியில் காதலி மீது புகார் அளித்த இளைஞர்: போலீஸ் கண்டுகொள்ளாததால் கையை அறுத்துக்கொண்டு ரகளை

தன்னை ஏமாற்றிய காதலிக்கு, தான் செலவு செய்த 3,000 ரூபாயை திருப்பி வாங்கித் தரும்படி இளைஞர் ஒருவர், மதுபோதையில் ஸ்டேஷனில் தகராறு செய்து கையை அறுத்துக்கொண்டார். அவரைச் சமாதானப்படுத்தி போலீஸார் அனுப்பி வைத்தனர்.

மதுரவாயல், மேட்டுக்குப்பத்தை சேர்ந்தவர் விக்கி என்ற கீரிப்புள்ள (21). இருசக்கர வாகன மெக்கானிக்கான இவர் நேற்று இரவு மதுரவாயல் காவல் நிலையத்திற்கு முழு போதையில் வந்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தி நாள் பந்தோபஸ்த்து ஏற்பாடு முடிந்து சோர்ந்துபோய் அமர்ந்திருந்த போலீஸாரிடம் புகார் அளிக்க வந்தார். ''ஒரு பெண்ணை உயிருக்கு உயிராய் காதலித்தேன், அவளும் அப்படித்தான், ஆனால் நான் மெக்கானிக் என்று தெரிந்தவுடன் விட்டுட்டுப் போய்விட்டாள் அவள் மீது புகார் கொடுக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

அவர் சொன்ன கதையைக் கேட்ட போலீஸாருக்கு சிரிப்புதான் வந்தது. ''புகார் என்று கேட்டால் சினிமா கதை சொல்கிறாய்? தனுஷ் படம் எதுவும் பார்த்தாயா?'' என்று சிரித்தபடிபோலீஸார் கூறியுள்ளனர். பின்னர், ''போய்விட்டு காலையில் போதை தெளிந்தவுடன் வா. அப்போது புகார் கொடுத்தால் வாங்கிக்கொள்கிறோம்'' என்று அனுப்பியுள்ளனர்.

''புகார்கூட வேண்டாம், நான் காதலிக்கும்போது அவளுக்காக மூன்றாயிரம் ரூபாய் செலவழித்தேன். அதை வாங்கிக் கொடுங்கள்'' என அந்த இளைஞர் மீண்டும் அடம்பிடித்துள்ளார்.

என்னய்யா இவன் காதல் இவ்வளவு சீப்பா இருக்கு, 3000 ரூபாய் செலவு செய்ததை நம்மை வாங்கிக் கொடுக்கச் சொல்கிறான் என பேசிக்கொண்ட போலீஸார், ''கிளம்பு. காலையில் போதை தெளிந்தவுடன் வா'' என்று வெளியே அனுப்பியுள்ளனர்.

''என் காதல் எவ்வளவு புனிதம்னு நம்ப மாட்டேங்கிறீங்க இல்ல. நான் யாருன்னு காட்டுகிறேன்'' என்று கூறிய அந்த இளைஞர் தனது பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த பிளேடால் தனது முழங்கை முழுதும் வரிவரியாக அறுத்துக்கொண்டார். இதனால் ரத்தம் சொட்ட ஆரம்பித்துவிட்டது.

ஸ்டேஷனுக்கு வெளியே என்பதால் போலீஸாரும் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து இரவில் நெரிசலான அந்த நேரத்தில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலையின் நடுவே நின்று தற்கொலை முயற்சியில் ஈடுபட முயன்றார். நிலைமை விபரீதமாவதை உணர்ந்தவுடன் அந்த இளைஞரை இழுத்து வந்த போலீஸார் ஒரு மாதிரியாகப் பேசி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

அப்படியும் சமாதானம் ஆகாத அந்த இளைஞர், ''இங்கு வந்து கேட்டால்தானே கண்டுகொள்ள மாட்டேங்கிறீங்க. அந்தப் பொண்ணு வீட்டில் போய் கேட்கிறேன். அப்ப நீங்க அங்க வந்துதானே ஆகவேண்டும்'' என சவால்விட்டு கிளம்பிச் சென்றார்.

அதன்பின்னர் அங்கிருந்து சென்ற இளைஞர் திரும்பவில்லை. போலீஸுக்கும் எந்தப் புகாரும் வரவில்லை. சில மணி நேரம் போலீஸாரின் நிம்மதியைக் கெடுத்த இளைஞர் அங்கிருந்து சென்ற பின்னர் போலீஸார் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

நடிகர் தனுஷ் நடித்த ‘தேவதையைக் கண்டேன்’ படத்தில் நாயகி ஸ்ரீதேவி தனுஷைக் காதலிப்பார் அவர் டீ விற்கும் நபர் என்று தெரிந்தவுடன் காதலை ஏற்க மறுத்து விடுவார். இதனால் தன்னைக் காதலித்து ஏமாற்றிய காதலி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடிபோதையில் மாடியில் இருந்து குதிப்பதாக ரகளை செய்வார்.

பின்னர் தனுஷ் தனது காதலி மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பார். படத்தில் வந்த காட்சி போல் காதலிக்கு செலவு செய்த பணத்தைத் திரும்ப வாங்கித் தருமாறு போலீஸ் நிலையம் முன்பு தகராறு செய்த இளைஞரால் மதுரவாயல் காவல் நிலையமும் நேற்றிரவு பரபரப்பாக இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x