Published : 03 Sep 2019 02:19 PM
Last Updated : 03 Sep 2019 02:19 PM
டெல்லி,
டெல்லியைச் சேர்ந்த 91 வயது முன்னாள் அரசு ஊழியரை அவரது உதவியாளரே கொலை செய்து குளிர்சாதனப் பெட்டியில் அடைத்துக்கொண்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியைச் சேர்ந்தவர் கிருஷ்ணா கோஷ்லா (91). ஓய்வுபெற்ற அரசு ஊழியரான இவர் தனது மனைவி சரோஜ் கோஷ்லாவுடன் தெற்கு டெல்லியில் உள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வந்தார். இவர்களது பிள்ளைகள் குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். வருமானத்துக்குப் பஞ்சமில்லாத நிலையில் டெல்லியில் வசிக்கும் கிருஷ்ண கோஷ்லா தம்பதியை கவனித்துக்கொள்ள கிஷான் என்பவரைப் பணிக்கு அமர்த்தியிருந்தனர். கடந்த ஒரு வருடமாக கிஷான் உதவியாளராக வேலை செய்து வருகிறார்.
பணியின்போது கிஷான் செய்யும் சிறு சிறு தவறுகளைப் பொறுத்துக் கொள்ளாத முதியவர் கோஷ்லா கடுமையாக கண்டிப்பது உண்டு. இது கிஷானுக்குப் பிடிக்கவில்லை. முதியவர் கோஷ்லா வசதியானவர் என்பதால் பணப்புழக்கம் வீட்டில் அதிகம் இருந்துள்ளது. இதை அடிக்கடி கவனித்து வந்த கிஷான் முதியவர் மேல் உள்ள கோபத்தால் அவரைக் கொன்று பணத்தைக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து தனது நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிட்ட கிஷான், கடந்த சனிக்கிழமை அன்று திட்டமிட்டபடி முதியவர் கோஷ்லாவுக்கும் அவரது மனைவி சரோஜுக்கும் தேநீரில் மயக்க மருந்தைக் கலந்துகொடுத்துள்ளார். அவர்கள் மயங்கியவுடன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கிருஷ்ணா கோஷ்லாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் வீட்டில் இருந்த 3 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு நண்பர்களுடன் தப்பிச் சென்றுள்ளார்.
சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து எழுந்த சரோஜ் கோஷ்லா தனது கணவரைத் தேடியுள்ளார். கணவரையும் வீட்டில் இருந்த பணம் மற்றும் குளிர்சாதனப் பெட்டியையும் காணவில்லை. உதவியாளர் கிஷானையும் காணவில்லை. ஒன்றும் புரியாத நிலையில் டெல்லி போலீஸுக்குத் தகவல் அளித்தார்.
சம்பவ இடத்துக்கு வந்த டெல்லி போலீஸார் அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கினர். உதவியாளர் கிஷான் மீது சந்தேகம் அடைந்த போலீஸார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி சோதித்தனர். அதில் கிஷானும் அவரது நண்பர்களும் வீட்டிலிருந்த குளிர் சாதனப் பெட்டியை டெம்போவில் ஏற்றிக் கொண்டு சென்றது பதிவாகியிருந்தது.
இதையடுத்து கிஷானின் நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்ற போலீஸார் அங்கிருந்த கிஷானையும் அவரது நண்பர்களையும் பிடித்து விசாரித்தனர். முதியவர் கோஷ்லா எங்கே என்று கேட்டபோது அவர்கள் குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து காட்டியுள்ளனர். அதற்குள் கோஷ்லா மடங்கிய நிலையில் பிணமாகக் கிடந்தைக் கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.
அவர்கள் அனைவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களைத் தெரிவித்தனர்.
”கிருஷ்ணா கோஷ்லா மிகுந்த கண்டிப்புடனும் எப்போதும் திட்டிக் கொண்டே இருந்ததாலும் கடந்த ஒரு மாத காலமாக அவரைக் கொலை செய்யத் திட்டம் தீட்டி சரியான தருணம் வந்ததும் அவரைக் கொலை செய்தோம். பின்னர் அங்கிருந்த குளிர்சாதனப் பெட்டியில் அவரது உடலை அடைத்து நாங்கள் வந்த டெம்போவில் ஏற்றினோம். வீட்டின் காவலாளிகள் கேட்டதற்கு குளிர்சாதனப் பெட்டி பழுதாகிவிட்டது என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி ஒரு நண்பரின் வீட்டுக்குச் சென்றோம். அந்த வீட்டின் பின்புறத்தில் கோஷ்லாவின் உடலைப் புதைப்பதற்காக 6 அடியில் ஒரு பள்ளத்தைத் தோண்டினோம். அப்போது போலீஸார் எங்களை மடக்கிப் பிடித்து விட்டனர்''.
இவ்வாறு குற்றவாளிகள் கூறியதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தான் ஒரு வருடத்துக்கும் மேலாகப் பணியாற்றிய முதலாளியையே உதவியாளர் ஒருவர் கொலை செய்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT