Published : 28 Aug 2019 03:19 PM
Last Updated : 28 Aug 2019 03:19 PM

சத்தியமங்கலத்தில் ஆன்லைன் மூலம் விளம்பரம் செய்து ரூ.15 கோடி மோசடி: 3 பேர் கைது

பிரதிநிதித்துவப் படம்

சத்தியமங்கலம்

சத்தியமங்கலத்தில் ரூ.1 லட்சம் பணம் கொடுத்தால் 100 நாட்களில் ரூ. 2.5 லட்சம் வழங்கப்படும் என ஆன்லைனில் கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்து 1300 பேரிடம் ரூ.15 கோடி வசூல் செய்து தலைமறைவான கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை சந்தன டிப்போ மேற்கு வீதியில் 'குவாலிட்டி டிரேடர்ஸ்' என்ற நிறுவனம் கடந்த ஓராண்டுக்கு முன்பு தொடங்கப்பட்டு 'ரிலீப் ஹெர்பல்ஸ்' என்ற பெயரில் மூலம், பவுத்திரம் மற்றும் ஆண்மைக்குறைவு மருந்து உள்ளிட்ட பல்வேறு வகை மருந்துகளை டீலர்கள் மூலம் விற்பனை செய்துவந்தது.

இந்த நிறுவனத்தில் சத்தியமங்கலம் அருகே உள்ள கெம்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த தங்கராஜ் என்பவர் நிர்வாக இயக்குநராகவும் கடம்பூர் மலைப்பகுதியை சேர்ந்த ஆனந்த், பிரகாஷ் மற்றும் கவுந்தப்பாடி ஆண்டிபாளையத்தை சேர்ந்த பிரபாகரன் ஆகிய 3 பேர் பங்குதாரர்களாகவும் இருந்துள்ளனர்.

இந்நிலையில் இவர்களின் நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு அதிக லாபம் வழங்கப்பட உள்ளதாகவும் ஒரு லட்சம் பணம் செலுத்தினால் 100 நாட்களுக்கு ரு.2500 வீதம் ரு.2.50 லட்சம் வழங்குவதாக ஆன்லைனில் கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்துள்ளனர்.

இதை நம்பி தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 1300-க்கும் மேற்பட்டோர் சுமார் 15 கோடி வரை முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

முதலில் பணம் செலுத்திய முதலீட்டாளர்களுக்கு தினமும் அவர்களது வங்கி கணக்கில் ரு.2500 செலுத்தியதால் இதை நம்பி பலரும் பணம் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளனர். மேலும் பணம் செலுத்தியதற்கு உத்தரவாதமாக 20 ருபாய் மதிப்பு ஸ்டாம்ப் பேப்பரில் ஒப்பந்தம் எழுதிக்கொடுத்ததோடு ஒரு லட்சம் ருபாய்க்கான காசோலையையும் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக முதலீட்டாளர்களுக்கு தினமும் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படாததால் பணம் செலுத்தியவர்கள் பணத்தை திருப்பித் தருமாறு தொடர்ந்து வற்புறுத்தி கேட்டதால் தங்கராஜ், ஆனந்த், பிரகாஷ் ஆகிய 3 பேரும் தலைமறைவாகினர்.

இதையடுத்து இந்த நிறுவனத்தில் பணம் கட்டிய தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த மகாலட்சுமி, சென்னை எர்ணாவூர் பகுதியை சேர்ந்த தென்னரசி, கடலூர் மாவட்டம் திருப்பாபுலியூரை சேர்ந்த சிலம்பரசன் ஆகிய 3 பேரும் தங்கராஜ், ஆனந்த், பிரகாஷ், பிரபாகரன் ஆகிய 4 பேர் மீது சத்தியமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் பங்குதாரர் பிரபாகரன், தலைமறைவான தங்கராஜின் தந்தை துரைசாமி, இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு காசோலை வழங்கிய சத்தியமங்கலத்தை சேர்ந்த பொன்னுசாமி ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

தலைமறைவான 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சுமார் 15 கோடி வரை மோசடி செய்துள்ளதாக காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 3 பேர் மட்டும் தற்போது புகார் கொடுத்த நிலையில் பணத்தை கட்டி ஏமாந்த நபர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளதால் சத்தியமங்கலம் காவல்நிலையத்தில் இதுதொடர்பான புகார்கள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவிந்தராஜ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x