Published : 28 Aug 2019 11:52 AM
Last Updated : 28 Aug 2019 11:52 AM
லக்னோ,
உத்தரப் பிரதேசத்தில் சட்ட மாணவி ஒருவர் மாயமான விவகாரத்தில் பாஜக முன்னாள் அமைச்சர் சுவாமி சின்மயானந்தா மீது உத்தரப் பிரதேச போலீஸார் கடத்தல் மற்றும் சட்டவிரோதமாக சிறை வைத்தல் வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக கடந்த சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 24) உத்தரப் பிரதேசத்தின் ஷாஜஹான்பூரில் உள்ள எஸ்.எஸ். சட்டக் கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவர் தனது சமூகவலைதள பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார்.
அதில் தனது கல்லூரி நிர்வாகத்தின் உயர் பொறுப்பில் இருக்கும் சிலர் தன்னிடம் அத்துமீறியதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார். அந்த வீடியோவில் அவர் யாருடைய பெயரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.
ஆனால், "சன்த் சமாஜத்தின் ஒரு பெரிய தலை, பல்வேறு பெண்களின் வாழ்வை சீரழித்தவர் இப்போது என்னையும் கொலை செய்ய முயல்கிறார். அவர் எனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுக்கிறார். தயவு செய்து உதவுங்கள். அவர் தனது கையில் போலீஸ், உயரதிகாரிகளை வைத்துள்ளார். முதல்வர் யோகி அவர்களையும், பிரதமர் மோடி அவர்களையும் உதவிக்கு அழைக்கிறேன்" எனக் கூறியிருந்தார்.
அந்தப் பெண் அழுது புலம்பும் வீடியோ கடந்த 4 நாட்களாகவே வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வெளியான அடுத்த நாளே சட்ட மாணவி மாயமானார்.
அந்தப் பெண் பயிலும் கல்லூரியின் நிர்வாகக் குழுவின் தலைவராக சுவாமி சின்மயானந்தா இருக்கிறார்.
இந்நிலையில் அந்தப் பெண்ணின் தந்தை, சுவாமி சின்மயானந்தா பெயரைக் குறிப்பிட்டு தனது மகள் காணாமல் போன புகாரை பதிவு செய்துள்ளார். சின்மயானந்தா அதிகார பலமிக்கவர் அவரே எனது மகளை கடத்தியிருக்க வேண்டும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில் சின்மயானந்தா வழக்கறிஞர் பதிவு செய்த புகாரில், "ஆஸ்ரமத்தின் பெயரையும் சுவாமி சின்மயானந்தாவின் பெயரையும் கெடுக்க நடத்தப்படும் சதி இது. இந்த வீடியோவை வெளியிட்டவர் ரூ.5 கோடி பேரம் பேசுகிறார்" எனக் குறிப்பிட்டார்.
நிலுவையில் உள்ள வழக்கு:
சுவாமி சின்மயானந்தாவுக்கு எதிராக கடந்த 2011-ல் முதல் தகவலறிக்கைப் பதியப்பட்டது. ஆசிரமத்தில் பல ஆண்டுகள் தங்கியிருந்த பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் முதல் தகவலறிக்கைப் பதியப்பட்டது.
அந்தப் பெண் தனது புகார் மனுவில் ஆசிரமத்தில் சுவாமி சின்மயாநந்தா தன்னை பலமுறை பலாத்காரம் செய்ததாக குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இதுவரை ஒருமுறைகூட சின்மயானந்தா கைதாகவில்லை என்பது குரிப்பிடத்தக்கது.
- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT