Published : 23 Aug 2019 03:54 PM
Last Updated : 23 Aug 2019 03:54 PM
தமிழகத்தில் 6 தீவிரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை தகவல் கூறிய நிலையில், தீவிரவாதி என்று சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படங்களை போலீஸார் வெளியிடவில்லை என்று டி.ஜி.பி திரிபாதி விளக்கமளித்துள்ளார்.
இலங்கை, பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த 6 தீவிரவாதிகள் இலங்கை வழியாக தமிழகத்தில் நுழைந்து இருப்பதாக உளவுத்துறை எச்சரித்ததை அடுத்து தமிழகம் முழுதும் நேற்று இரவு முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட எஸ்பி களுக்கும் வாகன சோதனை மற்றும் சுங்கச்சாவடி சோதனையில் ஈடுபடுமாறு டிஜிபி அதிரடியாக உத்தரவு பிறபித்துள்ளார்.
அனைத்து அதிகாரிகளும், கீழ்மட்ட நிலையில் உள்ள போலீஸாரும் ரோந்துப்பணியிலும், வாகன சோதனையில் ஈடுபடுமாறு உத்தரவிட்டுள்ளார். பொதுமக்கள் கூடும் இடங்கள், பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம், வழிபாட்டுத்தளங்களில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகப்படும் இடங்களில் சோதனை நடத்தவும் தங்கும் விடுதிகளில் சோதனை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபடுவதாக சந்தேகப்படுபவர்கள், ரவுடிகள் உள்ளிட்டோரை முன்னெச்சரிக்கையாக கைது செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவையில் ஊடுருவியுள்ளதாக சந்தேகிப்பதால் கோவையில் ரயில் நிலையம், பேருந்து நிலையம், கோவில்கள், தேவாலயம், மசூதிகள் போன்ற இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
உக்கடம் ,கோட்டைமேடு, குனியமுத்தூர், கரும்புக்கடை உள்ளிட்ட பகுதிகளிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.ரயில் நிலையத்தில் பயணிகளின் உடமைகள் தீவிர சோதனைக்கு பின்பே அனுமதிக்கப்படுகின்றன.
இந்த நிலையில், கோவையில் ஊடுருவியுள்ளதாக முக்கிய தீவிரவாதி என்று சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படங்கள் என 2 படங்களை ஊடகங்கள், தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. இதுகுறித்து காவல்துறை டிஜிபியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு தீவிரவாதிகள் என்று சந்தேகிப்போரின் புகைப்படங்கள் எதையும் காவல்துறை வெளியிடவில்லை என்று டிஜிபி திரிபாதி விளக்கம் அளித்துள்ளார்.
இதேப்போன்று கோவை ஆணையரும் மறுத்துள்ளார். இதனிடையே தொலைக்காட்களில் இன்று தீவிரவாதிகளின் புகைப்படங்கள் என்று 2 படங்கள் வெளியானது. இதில் ஒரு புகைப்படம் நெல்லை ஆலங்குளம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரின் போட்டோ என்று தகவல் வெளியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT