Published : 21 Aug 2019 01:11 PM
Last Updated : 21 Aug 2019 01:11 PM

தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டுகிறார்: மதுமிதா மீது பிக் பாஸ் நிர்வாகம் புகார்

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இடையில் வெளியேறிய நடிகை மதுமிதா, தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டுவதாக பிக் பாஸ் நிர்வாகம் அளித்த புகாரின்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் நடிகை மதுமிதாவும் ஒருவர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சில நாட்களிலேயே ஆடை குறித்து விமர்சனம் செய்ததால், வனிதா, ஷெரின், சாக்‌ஷி, அபிராமி, ரேஷ்மா உள்ளிட்டோரால் தனிமைப்படுத்தப்பட்டார் மதுமிதா.

தனிமையில் கண்ணீர் வடித்தபடி, கடவுளைத் தொழுதபடி இருந்த மதுமிதாவுக்கு ஆதரவாக சரவணன், சேரன் உள்ளிட்டோர் இருந்தனர். பின்னர், வனிதா வெளியேற்றப்பட்ட பிறகு மதுமிதா சாதாரணமாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டார். எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவரான மதுமிதா, பிக் பாஸ் இல்லத்தில் நடந்த டாஸ்க் ஒன்றில் கடுமையாகக் கோபப்பட்டு கண்ணீர் வடித்தார்.

மாதவிலக்கு நேரத்திலும் தன்னை டாஸ்க்கில் கஷ்டப்படுத்தினர், உருவ கேலி செய்தனர் என குற்றம் சாட்டினார் மதுமிதா. எனவே, அவருக்கு மக்கள் ஆதரவு கிடைத்ததால், அவர் ஒவ்வொரு முறையும் எவிக்‌ஷன் ப்ராசசில் இருந்து தப்பித்தார். குழு உறுப்பினர்களிடம் பழகுவதிலும், உதவி செய்வதிலும் அவர் காட்டிய ஆர்வம் காரணமாக, நிகழ்ச்சியின் இறுதிவரை செல்லும் போட்டியாளராக இருப்பார் என பாராட்டப்பட்டார்.

ஆனால், பாராட்டப்பட்ட அந்த வாரமே வைல்ட் கார்டு மூலம் என்ட்ரி ஆன வனிதா சில தகவல்களைச் சொல்ல, அதைப் பிடித்துக்கொண்டு உணர்ச்சிப்பெருக்கில் ஆண் போட்டியாளர்களிடம் மோதலில் ஈடுபட்டார். ஆண் போட்டியாளர்கள், பெண் போட்டியாளர்களைப் பயன்படுத்திக் கொள்வதாகவும் குற்றம் சாட்டினார்.

இதற்கு ஆதரவாக கஸ்தூரியும் சேரனும் பேச, மதுமிதா தனது வார்த்தையில் உறுதியாக நின்றதால் தனிமைப்படுத்தப்பட்டார். எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய மதுமிதா, தனது கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்.

அவரிடம் கமல்ஹாசன், “வெல்வீர்கள் என்று சந்தோஷப்பட்டால் இதுபோன்றதொரு சூழ்நிலையை உருவாக்கிவிட்டீர்களே...” என மிகுந்த வருத்தத்துடன் கூறியதோடு, “இதை எக்காலத்திலும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்” எனவும் தெரிவித்தார்.

ஏற்கெனவே பிக் பாஸ் வீட்டில், தான் கல்லூரி நாட்களில் பேருந்தில் பெண்களை உரசவே ஏறியதாக சரவணன் தெரிவிக்க, அதை எப்படி அனுமதிக்கலாம் என எதிர்ப்பு கிளம்பியதால் வெளியேற்றப்பட்டார். அந்தப் பிரச்சினையின் சூடு ஆறுவதற்குள் மதுமிதாவின் தற்கொலை முயற்சி பிக் பாஸுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்.வி.சேகர் போன்றோர் பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டளர்களுக்கு எதிராக ட்வீட் செய்து வருகின்றனர். இந்நிலையில், திடீர் திருப்பமாக பிக் பாஸ் நிர்வாகம் மதுமிதா மீது கிண்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.பிக் பாஸ் சட்டத்துறை மேலாளர் பிரசாத் சார்பில் புகார் அளிக்கப்பட்டதாக காவல்துறை வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

அவர்களது புகாரில், “நான் விஜய் டிவியின் சட்டத்துறை மேலாளராகப் பணிபுரிந்து வருகிறேன். விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட லோகேஸ்வரி (எ) மதுமிதா, தன்னைக் காயப்படுத்திக் கொண்ட காரணத்தால் 50 நாட்களிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். வெளியேற்றப்படுவதற்கு முன்பு காயத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, கடந்த 18 -ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டார்.

அவர் செல்லும்போது, நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக 11 லட்சத்து 50 ஆயிரம் பெற்றிருந்ததாகவும், மீதமுள்ள 42 நாட்களுக்கான பணத்தை திருப்பித் தருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதை ஒப்புக்கொண்டு சென்றவர், மறுநாள் 3.30 மணிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் டீனாவின் தொலைபேசி வாட்ஸ் அப் எண்ணுக்கு வாய்ஸ் மெசேஜ் மூலம், ‘பணத்தை இரண்டு நாட்களில் தரவில்லை என்றால் நான் தற்கொலை செய்து விடுவேன்’ என்றும், ‘நீங்கள் தரும்வரை என்னால் காத்திருக்க முடியாது. என்னை ஏமாற்றி விட்டீர்கள்’ என மிரட்டுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

சட்ட மேலாளர் பிரசாத், நேற்று (ஆகஸ்ட் 20) மாலை 7 மணி அளவில் கிண்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருவதாகத் தெரிகிறது.

அமலாபாலுக்கு எவ்வளவு தைரியம்!: வசுந்தரா பேட்டி - வீடியோ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x