Published : 05 Aug 2019 01:06 PM
Last Updated : 05 Aug 2019 01:06 PM

அரும்பாக்கத்தில் சாலை நடுவே கால் டாக்ஸி ஓட்டுநரைத் தாக்கி நூதன வழிப்பறி: தாக்குதலைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்த பொதுமக்கள்

நடுசாலையில் கால் டாக்ஸி ஓட்டுநருடன் வாக்குவாதம் செய்யும் நபர்கள்

சென்னை அரும்பாக்கத்தில் சாலையில் சென்ற கால் டாக்ஸியை வழிமறித்து சவாரிக்கு அழைத்த 2 இளைஞர்கள் ஓட்டுநரைச் சரமாரியாகத் தாக்கி பணம், செல்போனை வழிப்பறி செய்தனர். சரமாரியாக அவர்கள் தாக்கும்போது பொதுமக்கள் தடுக்காமல் வேடிக்கை பார்த்தபடி ஒதுங்கிச் சென்றனர்.

கோயம்பேட்டைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன்(28). இவர் கால் டாக்ஸி ஓட்டுநராக உள்ளார். நேற்று மாலை பணிமுடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அரும்பாக்கம் எம்எம்டிஏ அருகே அவரது கார் வந்தபோது இரண்டுபேர் அவரது காரை வழிமறித்து சவாரிக்கு வரும்படி அழைத்தனர்.

கார் நேரடியாக சவாரிக்கு வராது. உங்களுக்கு கார் வேண்டுமானால் அதற்குரிய செயலியில் அழையுங்கள் உடனடியாக கார் வரும் என்று ஓட்டுநர் தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.இதனால் அவருக்கும் இரு இளைஞருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஓட்டுநரை இரு இளைஞர்களும் தாக்க முயல, அவர் அங்கிருந்து நகர்ந்து சென்றார். அதற்குள் ஒருவர் காருக்குள்ளிருந்து ஏதோ ஒன்றை எடுத்து பாக்கெட்டில் போட்டுக்கொண்டு மீண்டும் ஓட்டுநர் தமிழ்ச்செல்வனை அழைத்து தகராறில் ஈடுபட்டனர்.

ஒரு கட்டத்தில் நடுசாலையில் ஓட்டுநரை இருவரும் சரமாரியாகத் தாக்கினர். அப்போது அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் சாதாரணமாக வேடிக்கை பார்த்தபடி கடந்து சென்றனர். யாரும் தடுக்கவோ, ஏன் அவரைத் தாக்குகிறாய் என்று கேட்கவோ முயலவில்லை. 

ஒருகட்டத்தில் ஓட்டுநரைத் தாக்கிய இருவரும், அவரிடமிருந்த ரூ.4000 பணம் மற்றும் செல்போனைப் பறித்துக்கொண்டு நடந்து சென்றனர். ரத்தக்காயத்துடன் வந்த ஓட்டுநர் தமிழ்ச்செல்வன் பின்னர் தான் தாக்கப்பட்டு வழிப்பறி செய்யப்பட்டது குறித்து போலீஸுக்குத் தகவல் கொடுத்தார்.

மேற்கண்ட சம்பவத்தைப் பின்னால் காரில் வந்த ஒருவர் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேற்கண்ட பதிவை வைத்து அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x