Published : 27 Jul 2019 04:37 PM
Last Updated : 27 Jul 2019 04:37 PM

மொய் விருந்து வசூல் ரூ.4 கோடியை திருட முயற்சி: இளைஞர் கைது

கிருஷ்ணமூர்த்தியின் வீடு. உள்படம்: கைதான சிவனேசன்

புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் மொய் விருந்து மூலம் வசூலாகிய ரூ.4 கோடியை திருட முயன்ற இளைஞரை போலீஸார்  கைது செய்தனர்.

வடகாடு, சாத்தன்பட்டியைச் சேர்ந்தவர் டி.கிருஷ்ணமூர்த்தி. இவர், உள்ளூரில் ஃபிளக்ஸ் பிரிண்டிங் தொழில் செய்து வருகிறார். இவரது மொய் விருந்து விழா வடகாடு முத்துமாரியம்மன் கோயிலில் ஜூலை 25-ம் தேதி நடைபெற்றது. அதில், இம்மாவட்டத்தில் இதுவரை தனிநபர் யாருக்கும் இல்லாத வகையில் ரூ.4 கோடி வசூலாகியது.

இவ்விழாவில், மொய்ப்பணம் எண்ணும் பணியை 5 துப்பாகிகள் ஏந்திய தனியார் பாதுகாவலர்கள், கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டன.  விழா பந்தலில் தனியார் வங்கி அலுவலர்கள் ஸ்டால் அமைத்து தொகையை சரிபார்த்துக் கொடுத்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு மின் நிறுத்தம் ஏற்பட்டதையடுத்து தனது வீட்டுக்குள் இருந்து கிருஷ்ணமூர்த்தி வீட்டின் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்துள்ளார். அப்போது, வாசலில் இருந்து மர்ம நபர் ஒருவர் ஓடியுள்ளார். உடனே கிருஷ்ணமூர்த்தி  கூச்சலிட்டதைத் தொடர்ந்து, அக்கம்பக்கத்தினர் திரண்டு, டார்ச் லைட்டோடு தேடியுள்ளனர்.

அப்போது, வீட்டின் அருகே சோளக் காட்டுக்குள் அணவயல் கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் சிவனேசன்(24) பதுங்கியிருந்துள்ளார்.  இவரைப் பிடித்து விசாரித்ததில் கிருஷ்ணமூர்த்தியின் வீட்டுக்குள் புகுந்து திருட முயன்றது தெரியவந்துள்ளது.

 மேலும், ஈரோட்டில் உள்ள டைல்ஸ் கடையில் வேலை செய்து வந்த இவர், 3 தினங்களுக்கு முன்பு ஊருக்கு வந்ததும், கிருஷ்ணமூர்த்திக்கு அறிமுகமானவர் என்பதும் தெரியவந்தது.

 இதையடுத்து சிவனேசனை பிடித்து வடகாடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர், அவரை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x