Published : 16 Jul 2019 12:31 PM
Last Updated : 16 Jul 2019 12:31 PM
திருப்பூர்
பல்லடம் அருகே இறுதிச் செலவுக்குப் பணம் கொடுத்துவிட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன், மகள் தற்கொலை செய்துகொண்டனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மங்கலம் பகுதியில் உள்ள சின்னகாளிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் துரைராஜ் (70). கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் அவரது மனைவி ராசாத்தி காலமாகிவிட்டார். இவருக்கு செல்வி (42) என்கிற மகளும், கோபாலகிருஷ்ணன் (39) என்கிற மகனும், சாந்தி என்கிற இளைய மகளும் உள்ளனர். செல்விக்கு சிவகுமார் என்பவருடன் திருமணம் நடந்து ரகுநாதன் (22) என்கிற மகன் இருந்தான்.
இந்நிலையில் கடந்த ஆண்டு ரகுநாதன் வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதனால் குடும்பமே மனமுடைந்து காணப்பட்டனர். இதனிடையே நேற்று (திங்கட்கிழமை) காலை தனது தங்கை சாந்தியைக் காண இடுவாய்க்கு கோபாலகிருஷ்ணன் சென்றுள்ளார். அப்போது சாந்தியிடம் இன்று செலவுக்குத் தேவைப்படும் என கூறி ரூபாய் 30,000-ஐ கோபாலகிருஷ்ணன் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
கோபாலகிருஷ்ணன்
இந்நிலையில் வீடு திரும்பிய கோபாலகிருஷ்ணன் மற்றும் குடும்பத்தினர் வெகுநேரம் ஆகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்த போது கோபாலகிருஷ்ணனின் உடல் வீட்டினுள் உள்ள விட்டத்தில் தூக்கில் தொங்கியபடி இருந்தது. மேலும், துரைராஜின் உடல் விஷம் அருந்தி உயிரிழந்த நிலையில் படுக்கையில் கிடந்தது.
மேலும் விஷம் அருந்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் செல்வியை மீட்ட அக்கம்பக்கத்தினர் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், செல்வி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
இந்நிலையில் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த மங்கலம் காவல் ஆய்வாளர் நிர்மலா உயிரிழந்த தந்தை மற்றும் மகன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தங்களது இறுதிச் செலவுக்குப் பணம் கொடுத்துவிட்டு குடும்பமே தற்கொலை சம்பவத்தில் ஈடுபட்டு தந்தை, மகன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT