Published : 19 Nov 2025 07:22 AM
Last Updated : 19 Nov 2025 07:22 AM
சென்னை: கபாலீஸ்வரர் கோயிலில் சாமி கும்பிடும் போது, மருத்துவ கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அரசுத்துறை ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். பூந்தமல்லி, நசரத்பேட்டை பகுதியில் உள்ள தனியார் ஆயுர்வேத கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வரும் 21 வயது மருத்துவ மாணவி ஒருவர், கடந்த 16-ம் தேதி மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலுக்கு வந்தார். அவரை 45 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் பின் தொடர்ந்தார்.
பின்னர், அந்த பெண் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த போது, பின் தொடர்ந்து வந்த நபர் தவறான நோக்கத்தில் உரசி பாலியல் தொல்லை கொடுத்தார். அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, சம்பந்தப்பட்ட நபரை கண்டித்துள்ளார்.
இதனால், கோபம் அடைந்த அந்த நபர் “இப்படிதான் செய்வேன். உன்னால் முடிந்ததை செய்” என கூறியவாறு அங்கிருந்து தப்பிச் சென்றார். வேதனை அடைந்த அந்த மாணவி, இது தொடர்பாக மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
அதன்படி, போலீஸார் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (பிஎன்எஸ்) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, மாணவியிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்ட தமிழக அரசின் நகர்ப்புற மேம்பாட்டு துறை கார் ஓட்டுநரான திருவல்லிக்கேணியைச் சேர்ந்த விஜயகுமாரை (48) கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT