Published : 16 Nov 2025 02:56 PM
Last Updated : 16 Nov 2025 02:56 PM

ஆன்லைன் ட்ரேடிங் மூலம் 100+ பேரிடம் ரூ.100 கோடி மோசடியில் ஈடுபட்ட மேலும் இருவர் கைது

ஸ்ரீநாத் ரெட்டி | அனிதா

ஆன்லைன் டிரேடிங் மூலம் 100-க்கும் மேற்பட்டோரிடம் ரூ.100 கோடி மோசடி செய்த வழக்கில் மேலும் இருவரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் இவர்கள் சர்வதேச சைபர் குற்றவாளிகளுடன் கூட்டு சேர்ந்து மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது.

சென்னை பெருங்குடியைச் சேர்ந்தவர் கார்த்திக் (36). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த மார்ச் மாதம் சமூக வலைதளத்தில் ஆன்லைன் டிரேடிங் தொடர்பான விளம்பரத்தை பார்த்து, அதில் குறிப்பிட்டிருந்த வாட்ஸ்-அப் எண்ணைத் தொடர்பு கொண்டு ஒரு குழுவில் இணைந்தார். பின்னர், அந்த குழுவில் வந்த ‘லிங்க்’ மூலமாக, டிரேடிங் செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்தார். அப்போது, அதில், முதலீடு செய்யும் பணத்துக்கு அதிக லாபம் கிடக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதை நம்பி, பல்வேறு வங்கி கணக்குகளுக்கு கார்த்திக் ரூ.1.43 கோடி செலுத்தியுள்ளார்.

பணம் கேட்டு வற்புறுத்தல்: இந்நிலையில், அவர் செலுத்திய பணத்துக்கு ஏற்றவாறு அதிக லாபம் வந்ததுபோல, அந்த செயலியில் காண்பிக்கப் பட்டுள்ளது. அப்பணத்தை எடுக்க கார்த்திக் முயன்றார். அப்போது, அடையாளம் தெரியாத நபர்கள், வெவ்வேறு காரணங்களைக் கூறி,கார்த்திக்கு இடம் மேலும் பணம் கேட்டு வற்புறுத்தியுள்ளனர். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கார்த்திக், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த செப்.16-ம் தேதி புகார் அளித்தார்.

வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீஸார், மோசடி குற்றத்தில் ஈடுபட்ட நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த தனியார் ஏற்றுமதி நிறுவனத்தின் உரிமையாளர் சூர்யா ஸ்ரீனிவாஸ் (50), தனியார் வங்கியின் முன்னாள் கிளை மேலாளர் சேஷாத்ரி எத்திராஜ் (43), அனகாபுத்தூரைச் சேர்ந்த தினேஷ் (29), வாணியம்பாடியைச் சேர்ந்த அருண் பாண்டியன் (33) ஆகியோரைக் கைது செய்தனர்.

இந்நிலையில், இச்சம்பவத்துக்கு மூளையாகச் செயல்பட்ட கே.கே.நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் ரெட்டி (49), திருவள்ளூரைச் சேர்ந்த அனிதா (40) ஆகியோரைத் தேடி வந்த நிலையில், கடந்த 13-ம் தேதி சென்னையில் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஸ்ரீநாத் ரெட்டி, சென்னையில் பல போலி நிறுவனங்களை உருவாக்கி, 30-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் ஆரம்பித்து, வங்கி கணக்குகளை சர்வதேச சைபர் குற்றவாளிகளிடம் கொடுத்து, ரூ.100 கோடிக்கும் மேல் மோசடி செய்து, அதன்மூலம் பல கோடி ரூபாய் கமிஷன் பெற்றது தெரியவந்தது.

மேலும், இவர் இந்தியா முழுவதும் ஏஜென்ட்டுகளை நியமித்து அவர்கள் மூலம் பெற்ற வங்கி கணக்கு விவரங்களை சர்வதேச சைபர் குற்றவாளிகளிடம் கொடுத்து, இந்தியா முழுவதும் 100-க்கும் மேற்பட்டோரிடம் மோசடி செய்துள்ளதும், கைது செய்யப்பட்ட அனிதா, ஸ்ரீநாத் ரெட்டியிடம் 15 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x