Published : 12 Nov 2025 06:24 PM
Last Updated : 12 Nov 2025 06:24 PM

திருச்சியில் அமைச்சர்களின் வீடுகள், என்ஐடி-க்கு வெடிகுண்டு மிரட்டல்!

தென்னூர் அண்ணாநகரில் உள்ள அமைச்சர் அன்பில் மகேஸ் வீட்டில் மோப்பநாய் உதவியுடன் நடைபெற்ற வெடிகுண்டு சோதனை.

திருச்சியை சேர்ந்த திமுக அமைச்சர்கள், புதுக்கோட்டையை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சருக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியை சேர்ந்த திமுக அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ், புதுக்கோட்டையை சேர்ந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடுகள், திருச்சி துவாக்குடி என்ஐடி எனப்படும் தேசிய தொழில்நுட்பக் கழகம் மகளிர் விடுதி, திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரி ஆகியவற்றில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என்று சென்னையில் உள்ள காவல் துறை இயக்குநர் (டிஜிபி) அலுவலகத்துக்கு காமாட்சி என்ற பெயரில் இ-மெயில் இன்று காலை வந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, திருச்சி மாநகர வெடிகுண்டு கண்டறியும் மற்றும் செயலிழக்க செய்யும் பிரிவு போலீஸார், திருச்சி தில்லை நகரில் உள்ள அமைச்சர் நேருவின் வீடு, அலுவலகம், தென்னூர் அண்ணாநகரில் உள்ள அமைச்சர் அன்பில் மகேஸ் வீடு, வி.என் நகரில் உள்ள அலுவலகம், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர்.

மேலும், திருச்சி மாவட்ட வெடிகுண்டு கண்டறியும் மற்றும் செயலிழக்க செய்யும் பிரிவு போலீஸார் லால்குடியில் உள்ள நேருவின் வீடு, திருவெறும்பூரில் உள்ள அன்பில் மகேஸ் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து திருச்சி என்ஐடி மகளிர் விடுதியிலும் சோதனை நடத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.

அதையடுத்து, திருச்சி மாநகர மற்றும் மாவட்ட போலீஸார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அமைச்சர் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் அக்கட்சிகளை சேர்ந்தவர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x