Published : 10 Nov 2025 05:19 PM
Last Updated : 10 Nov 2025 05:19 PM

எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கு: லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட இரு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசின் அனுமதி கேட்க, 19 மாதங்கள் எடுத்துக் கொண்டது ஏன் என விளக்கம் அளிக்கும்படி, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சி துறை அமைச்சராக பதவி வகித்தபோது, சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில், 98 கோடியே 25 லட்சம் ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்படி பிறப்பித்திருந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதிராக, அறப்போர் இயக்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில், மத்திய அரசு கோரிக்கையின்படி, வழக்கு சம்பந்தமான 12 ஆயிரம் பக்கங்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, நவம்பர் 7-ம் தேதி அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதை மத்திய பணியாளர் நலத் துறை பெற்றுக் கொண்டுள்ளதாகவும், மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் நான்கு அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அனுமதி பெற்றுள்ள நிலையில், இரு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கேட்க 19 மாதங்கள் எடுத்துக்கொண்டது ஏன் எனக் கேள்வி எழுப்பினார்.

இந்த காலதாமதத்துக்கு லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அடுத்த தேர்தல் நெருங்கிவிட்டது. ஊழல் இல்லாத அரசு அமைய வேண்டும் என்பது பொதுமக்கள் விருப்பமாக உள்ளது. அதனால் அமைச்சர்கள், அதிகாரிகள் மீதான ஊழல் வழக்குகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் நம்பிக்கை இழந்து விடுவர் என நீதிபதி அறிவுறுத்தினார்.

பின்னர், இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கேட்க காலதாமதம் எடுத்துக் கொண்டது ஏன் என்பதற்கு விளக்கம் அளித்து அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நவம்பர் 24-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x