Published : 10 Nov 2025 06:34 AM
Last Updated : 10 Nov 2025 06:34 AM
தாம்பரம்: வண்டலூர் சிங்காரத்தோட்டம், பிரதான சாலையை சேர்ந்தவர் சந்திரசேகர் (65). அதே பகுதியில், ரியல் எஸ்டேட் அலுவலகம் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு அலுவலகத்தின் கதவை திறந்து வைத்தபடி அயர்ந்து தூங்கியுள்ளார்.
பின்னர், கண் விழித்து பார்த்த போது, சந்திரசேகர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு லேப்டாப், 2 மொபைல் போன் மற்றும் ரூ.40 ஆயிரம் பணம் காணாமல் போயிருப்பது தெரிந்து அதிர்ச்சியடைந்தார்.
இதற்கிடையே, அன்று நள்ளிரவு வண்டலூர், ஓட்டேரி பகுதியில் 2 மர்ம நபர்கள் ஒரு வீட்டின் கதவை உடைத்து திருட முயற்சித்துள்ளனர். கதவு உடைக்கப்படும் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் கூச்சல் போட்டதால், மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பினர். இந்த இரு சம்பவங்கள் குறித்தும், ஓட்டேரி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல், நன்மங்கலம், பெருமாள் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் ரங்கராஜன் (50). அதே பகுதியில் ஸ்டுடியோ கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி உஷா (43) கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்கச் சங்கிலியை அடகு கடையில் வைப்பதற்காக, கழற்றி நேற்றுமுன்தினம் பூஜை அறையில் வைத்துள்ளார். மாலையில் பார்த்த போது தங்கச் சங்கிலியை காணவில்லை. இது தொடர்பாக, மேடவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் ஆசிஷ் சந்த்ரா கரய் (30). கூலி தொழிலாளியான இவர், தாம்பரம் அருகே சேலையூர், சந்தோஷ்புரத்தில் தங்கி, கட்டுமான பணியில் ஈடுப்பட்டு வந்தார். இவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு பைக்கில் வந்த மர்ம நபர்கள் 3 பேர் நேற்று முன்தினம் இரவு துங்கி கொண்டிருந்த ஆசிஷ் மற்றும் அவரது நண்பரை எழுப்பி கத்தியை காட்டி மிரட்டி ரூ.3 ஆயிரம் பணம், 2 செல்போன், வெள்ளி செயின் ஆகியவற்றை பறித்து கொண்டு தலைமறைவானார். இதுகுறித்து சேலையூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
படப்பை, அண்ணா நகரில் பருப்பு விற்பனை செய்யும் கடை உள்ளது. நேற்று இரவு இந்த கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் கல்லா பெட்டியில் இருந்த ரூ.7 ஆயிரத்தை திருடி சென்றனர். இதுகுறித்து, கடை உரிமையாளர் மதுமிதா படப்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனிடையே, கடந்த 2 நாட்களாக தாம்பரம் மாநகர காவல் ஆணையராக எல்லையில், 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT