Published : 09 Nov 2025 12:41 AM
Last Updated : 09 Nov 2025 12:41 AM
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே மதுபோதையில் தனியார் பள்ளிப் பேருந்தை வழிமறித்து, கல்வீசி தாக்கிய இளைஞர் நேற்று கைது செய்யப்பட்டார். மேலும் 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் பூவம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிப் பேருந்து ஒன்று நேற்று முன்தினம் மாலை குழந்தைகளை ஏற்றிக்கொண்டு, அவரவர் வீடுகளில் இறக்கிவிடப் புறப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த அரசலங்குடி- எடுத்துக்கட்டி சாலையில் மாங்குடி என்ற இடத்தில் பேருந்து வந்தபோது, அங்கு மதுபோதையில் நின்று கொண்டிருந்த சில இளைஞர்கள் பேருந்தை வழிமறித்து கல்வீசி தாக்கினர். மேலும், பேருந்தில் இருந்த வைபர் போன்றவற்றை உடைத்து சேதப்படுத்தினர். இதைப் பார்த்து பேருந்தில் இருந்த குழந்தைகள் பயந்து
போய் அலறியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
6 பிரிவுகளின் கீழ் வழக்கு: இதையடுத்து, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின்பேரில், பள்ளிப் பேருந்தின் மீது கல்வீசி சேதப்படுத்தியது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், அந்த கும்பலைத் தேடி வந்தனர்.
விசாரணையில், அவர்கள் எடுத்துக்கட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஆகாஷ், கபிலன், எடுத்துக்கட்டி பூதனூர் பெருவேலி பகுதியைச் சேர்ந்த தாமரைச்செல்வன்(23) என்பது தெரியவந்தது. இதில் தாமரைச்செல்வனை நேற்று கைது செய்த போலீஸார், மற்ற இருவரை தேடி வருகின்றனர். அவர்களைப் பிடிக்க சீர்காழி துணை காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை, பொறையாறு காவல் ஆய்வாளர் அண்ணாதுரை, தனிப்படை உதவி ஆய்வாளர் அறிவழகன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT