Published : 08 Nov 2025 07:04 AM
Last Updated : 08 Nov 2025 07:04 AM
சென்னை: மெரினா கடற்கரையில் நொச்சிக்குப்பம் எதிரே உள்ள மணல் பரப்பில் நேற்று அதிகாலை 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் தலையில் வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அந்த வழியாக நடைப்பயிற்சிக்கு சென்றவர்கள் இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த மெரினா காவல் நிலைய போலீஸார் சம்பவ இடம் விரைந்து அந்த இளைஞரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று காலை 7.30 மணியளவில் அவர் உயிரிழந்தார்.
இக்கொலை தொடர்பாக மெரினா போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீஸாரின் விசாரணையில், அந்த நபர் கீழ்ப்பாக்கம் சாஸ்திரி நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அந்தோணி (33) எனத் தெரியவந்தது. அந்தோணிக்கு நொச்சி குப்பம் பகுதியில் தோழி ஒருவர் இருந்துள்ளார். அவருடன் அந்தோணி நெருக்கம் காட்டியுள்ளார்.
சம்பவத்தன்று இரவு மதுபோதையில் கீழ்ப்பாக்கத்திலிருந்து தோழி வீட்டுக்கு ஆட்டோ ஓட்டிச் சென்றுள்ளார். வள்ளுவர் கோட்டம் அருகே வாகன சோதனையில் போலீஸார் ஆட்டோவை பறிமுதல் செய்ததோடு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து அனுப்பினர். இதையடுத்து, அவர் வாடகை ஆட்டோவில் தோழி வீட்டுக்கு சென்று, அவருடன் நெருக்கமாக இருந்துவிட்டு, நள்ளிரவானதால் கடற்கரை மணற்பரப்பிலேயே படுத்துள்ளார்.
தாயுடனான கூடா நட்பை அறிந்த அவரது மகனான கல்லூரி மாணவர் நண்பருடன் சென்று அந்தோணியை கொலை செய்துள்ளதாக முதல் கட்ட தகவல் கிடைத்துள்ளது. தலைமறைவான கொலையாளிகள் பிடிபட்டால் கொலைக்கான விரிவான காரணம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர். மேலும் சுற்றுப் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையிலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT