Published : 07 Nov 2025 09:00 PM
Last Updated : 07 Nov 2025 09:00 PM
திருவள்ளூர்: சர்வதேச அளவில் தொடர்புகொண்ட போதைப்பொருள் நெட்வொர்க்கை கண்டறிந்து, திருவள்ளூர் மாவட்ட காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதுவரை 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மெத்தாம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்களை கடத்தி, விற்பனை செய்த பலர் குறித்த தகவல் காவல் துறைக்கு கிடைத்தது. இந்நிலையில், கடந்த அக்.14-ம் தேதி, 50 கிராம் மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த முன்னீர் (வயது 28) மற்றும் ஜாவேத் (வயது 38) மீது குற்ற வழக்கு பதிவு செய்தது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மணவாளநகர் காவல் நிலையம்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் அடிக்கடி மும்பை சென்று போதைப்பொருள் கடத்தி வந்து சென்னை மற்றும் பெங்களூரு நகரில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதன் பின்னணியில் வெளிநாட்டவர்களுக்கு தொடர்பு இருப்பதையும் போலீஸார் கண்டறிந்தனர்.
இந்தச் சூழலில் அக்.23-ம் தேதி சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர் சிபிராஜ் என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் 54 கிராம் மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் இருந்த காரணத்தால் குற்ற வழக்குப் பதிவு செய்தது மணவாளநகர் காவல் நிலையம். சில நாட்கள் இடைவெளியில் மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் வழக்குகள் பதிவான சூழலில் இந்த அமைப்பை கண்டறியும் வகையில் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை பகுதிகளை சேர்ந்த 20-க்கும் பேர் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டது. இதில் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் என 20 இடம்பெற்றனர்.
இந்த வழக்குகளில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த போதைப்பொருள் கும்பலின் செயல்முறையை காவல் துறை கண்டறிந்தது. சமூக வலைதளங்கள் மூலம் தகவல் பரிமாற்றம், வங்கி கணக்கு மூலம் பண பரிவர்த்தனை மேற்கொண்டது தெரியவந்தது. பணம் கைமாறியது உறுதியானதும், சென்னை மற்றும் பெங்களூரு நகரங்களில் ஏற்கெனவே போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்ட இடங்களின் ஜிபிஎஸ் விவரங்களை பகிர்ந்து, போதைப்பொருளை கைமாற்றி உள்ளனர்.
இப்படி தமிழகத்தில் இருந்து இந்த கும்பலுக்கு பணம் செலுத்தி, போதைப்பொருள் வாங்கிய 10 நபர்கள் கைதாகி உள்ளனர். இதில் நாமக்கல்லில் வசித்து வந்த நைஜீரியாவை சேர்ந்தவரும், சென்னையில் வசித்து வந்த காங்கோவை சேர்ந்த இரு வெளிநாட்டவர்களும் அடங்குவர். இந்நிலையில், இந்த கும்பலின் தலைவனை கைது செய்ய டெல்லியில் தமிழக காவல் துறையினர் முகாமிட்டனர். அங்கு 10 நாட்கள் சோதனை மேற்கொண்டதில் செனகல் நாட்டை சேர்ந்த பென்டே என்பவர் இதற்கு மூளையாக இருந்தது தெரியவந்தது.
அவரை டெல்லி போலீஸார் உதவியுடன் தமிழக காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து தமிழகம், கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள போதைப்பொருள் விநியோக வலையமைப்புகளைச் சார்ந்த விரிவான தகவல்கள் கொண்ட பல மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வடகிழக்கு மாநில எல்லைகளில் இருந்து அவர் போதைப்பொருள் வாங்கி வந்து மும்பை, சென்னை, பெங்களூரு நகரங்களில் விற்பனை செய்தது தெரியவந்தது.
டெல்லி நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய நிலையில் கடந்த 6-ம் தேதி திருவள்ளூர் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ளவர்கள் கண்டறியும் நடவடிக்கையை தற்போது தமிழக காவல் துறை மேற்கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT