Published : 07 Nov 2025 08:53 PM
Last Updated : 07 Nov 2025 08:53 PM
கோவை: கோவையில் காரில் பெண் கடத்தப்பட்டதாக எழுந்த புகாரில் திருப்பம் ஏற்பட்டது. தம்பதி இடையே நடந்த தகராறை கடத்துவதாக அளித்த தகவலால் சர்ச்சை என போலீஸார் விளக்கம் அளித்துள்ளனர்.
கோவை மாவட்டம் இருகூரை அடுத்த அத்தப்ப கவுண்டன்புதூர் சாலையில் உள்ள ஒரு இடத்தில் நேற்று (நவ.6) மாலை ஒரு கார் நின்று கொண்டிருந்தது. சில நிமிடங்களில் அந்த கார் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. அந்த காரில் பெண் ஒருவரை மர்ம நபர்கள் கடத்திச் செல்வதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை ஒருவர் தகவல் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து மாநகர காவல் துறையினர் உஷார்படுத்தப்பட்டனர்.
காவல் ஆணையர் ஆ.சரவண சுந்தர் உத்தரவின் பேரில், 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது. சிங்காநல்லூர் போலீஸார் தகவல் கிடைத்த இடத்துக்கு சென்று சிசிடிவி கேமரா காட்சிகளை சேகரித்து விசாரித்தனர்.
கார் தென்பட்ட அத்தப்ப கவுண்டன் புதூர், இருகூர் சாலை, திருச்சி சாலை, சூலூர் சாலை உள்ளிட்ட சாலைகளில் கண்காணிப்பை போலீஸார் தீவிரப்படுத்தினர். அப்பகுதிகளில் இருந்த 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்தனர். பின்னர், காரில் இருந்தவர்களின் வீட்டை கண்டறிந்து போலீஸார் இன்று (நவ.7) அங்கு சென்று விசாரித்தனர்.
தம்பதி இடையே நடந்த தகராறு: விசாரணையில், காரில் பயணித்தவர்கள் கணவன், மனைவி என்பதும், அவர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறை, கடத்தல் என அறிந்து வெளி நபர்கள் தகவல் பரப்பியதும் தெரியவந்தது.
இது தொடர்பாக மாநகர காவல் துறையினர் இன்று மாலை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘காரில் பயணித் தவர்கள் இருகூர் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர். பொருட்கள் வாங்குவது தொடர்பாக தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அத்தப்ப கவுண்டன் புதூர் சந்திப்பில் வாகனத்தை நிறுத்திவிட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
தகராறு செய்து கொண்டே வாகனத்தை எடுத்துச் செல்லும் போது, தம்பதி இடையே நடந்த கூச்சலை பார்த்த ஒருவர், யாரோ ஒரு பெண்ணை காரில் கடத்துகிறார்கள் என்று நினைத்து, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். காரில் கடத்தல் சம்பவம் நடந்ததாக தெரிவித்த நபரையும் கண்டறிந்து விசாரித்தபோது, காரில் யாரும் கடத்தப்பட்டதாக தான் பார்க்கவில்லை என்றும், காரில் இருந்தவர்கள் அதில் இருந்த ஒரு பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டதை, கூச்சலிட்டத்தை பார்த்ததாகவும் தெரிவித்துள்ளனர்’ எனக் கூறப்பட்டுள்ளது.
காரில் பயணித்த பெண் விளக்கம்: இதற்கிடையே, காரில் பயணித்த பெண் இன்று மாலை வெளியிட்ட வீடியோவில், ”நானும், எனது கணவர், மகன் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தோம். அப்போது ”பழங்கள் வாங்கலாம்” என கணவர் கூறினார். என்னை இறங்க கூறினார். நான் இறங்க மறுத்துவிட்டேன். அப்போது எங்களுக்குள் தகராறு ஏற்பட்டு நான் காரில் இருந்து கீழே இறங்கப் பார்த்தேன்.
அப்போது மகனும், கணவரும் கீழே இறங்கி உங்க வீட்டுக்கு போனால் பெரிய பிரச்சினை ஆகிவிடும், ”நீ வா” எனக் கூறினார். நான் ”வர மாட்டேன்” என்றேன். அப்போது ”வீட்டுக்கு சென்று பேசிக் கொள்ளலாம்” எனக் கூறினார். அப்போது அவர் என்னை அடித்தார். நான் திரும்ப அடித்தேன். அப்போது காரில் இருந்த மகன் எங்களை கண்டித்துவிட்டு, காரை எடுக்க கூறினார். நாங்கள் புறப்பட்டு வந்துவிட்டோம். இதுதான் நடந்தது” என்றார்.
தகவல் தெரிவித்த பெண் விளக்கம்: இதற்கிடையே, சம்பவத்தை பார்த்ததாக கூறும் பெண்ணிடம் போலீஸார் விசாரித்தனர். அப்பெண் கூறும்போது, ”நான் பார்த்த போது, வெள்ளை நிறகார் நின்று கொண்டிருந்தது. ஓட்டுநர் இருக்கையில் இருந்த ஆண், அருகேயிருந்த பெண்ணை தாக்கிக் கொண்டிருந்தார். அந்த பெண் சத்தம் போட்டார். பின்னர், கார் சென்று விட்டது. காரில் பெண்ணை ஏற்றுவது போல் நான் பார்க்கவில்லை. அவ்வாறு நான் கூறவும் இல்லை” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT