Published : 06 Nov 2025 08:49 PM
Last Updated : 06 Nov 2025 08:49 PM
ராமநாதபுரம்: பரமக்குடி அருகே பாஜக பிரமுகர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு 7 ஆண்டுகள், இருவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து ராமநாதபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சிவகங்கை மாவட்டம் கோலாந்தி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் (30), காளையார்கோவில் பாஜக ஒன்றிய இளைஞரணி தலைவராக இருந்தார். இவர், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே காட்டுப்பரமக்குடியில் கோழி மொத்த வியாபாரக் கடை நடத்தி வந்தார்.
இந்நிலையில், கடந்த 2015 அக்டோபரில் பரமக்குடி அருகே தென்பொதுவக்குடி பகுதியில் காரில் ரமேஷ் சென்றபோது, காட்டுப் பரமக்குடியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவர் பாலகிருஷ்ணனின் கார் உரசியது. இதில் ரமேஷுக்கும், பாலகிருஷ்ணன் மற்றும் அவரது கார் ஓட்டுநர் தேவராஜுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
இதனையடுத்து பாலகிருஷ்ணன் தனது கார் ஓட்டுநர் தேவராஜ் மூலம் ரமேஷை கொலை செய்யத் திட்டமிட்டார். அதன்படி, நவ.23ம் தேதியில் புழுதிக் குளம் பகுதியில் காரில் சென்ற ரமேஷைப், பின்தொடர்ந்து சென்ற ஒரு கும்பல், அவரை வெட்டிக் கொலை செய்தது.
இது தொடர்பாக பரமக்குடி தாலுகா போலீஸார், பாம்புவிழுந்தானைச் சேர்ந்த பாலா என்ற பரம்பை பாலா (52), பரமக்குடி பொன்னையா புரத்தைச் சேர்ந்த தேவராஜ் (22), இவரது தந்தை வேலுச்சாமி (65), திருமுருகன் (32), கருணாகரன் (32), மகேந்திரன் (53), காட்டுப்பரமக்குடியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கால்நடை மருத்துவர் பாலகிருஷ்ணன் (59), சுரேஷ்குமார் (50), ஆர்.எஸ்.மங்கலம் அருகே பெருமாள்மடையைச் சேர்ந்த தவமணி (64) உள்ளிட்ட 12 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை ராமநாதபும் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நடந்து வந்தபோது தேவராஜ், பாலகிருஷ்ணன் ஆகியோர் உயிரிழந்து விட்டனர். இவ்வழக்கின் இறுதி விசாரணை முடிந்து, இன்று முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி மெஹபூப் அலிகான் தீர்ப்பளித்தார்.
அதில், பரம்பை பாலா, வேலுச்சாமி ஆகியோருக்கு ஆயுள் சிறைத் தண்டனை மற்றும் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம், திருமுருகன், கருணாகரன் ஆகியோருக்கு ஆயுள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தவமணிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதமும், மகேந்திரன் மற்றும் சுரேஷ்குமாருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. 3 பேரை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிடப்பட்டது. இவ்வழக்கில் அரசு தரப்பில் மாவட்ட அரசு வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆஜரானார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT