Published : 05 Nov 2025 04:46 PM
Last Updated : 05 Nov 2025 04:46 PM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே பெண்கள் தங்கியிருந்த விடுதியின் குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்திய ஒடிசா மாநில பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த நாகமங்கலத்தில் டாடா தொழிற்சாலை இயங்குகிறது. இங்கு பணிபுரியும் பெண்கள் தங்குவதற்காக லாளிக்கல் எனும் பகுதியில் டாடா தொழிற்சாலை சார்பில் விடியல் ரெசிடென்சி விடுதி கடப்பட்டுள்ளது. இங்கு 8 பிளாக்கில் 11 அடுக்குகள் அமைந்துள்ளது. இங்கு 6,000-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி உள்ளனர். இந்நிலையில், பெண்கள் தங்கி இருந்த குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டுள்ளதாக நேற்று இரவு விடுதியில் தங்கியிருந்த 2,000-க்கும் மேற்பட்ட பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதனையடுத்து ஓசூர் உதவி ஆட்சியர் அக்ரிதிசேத்தி மற்றும் எஸ்பி தங்கதுரை ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பாதுகாப்புக்காக 100-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். இதனையடுத்து போலீஸார் விசாரணையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பெண் தொழிலாளி நீலுகுமாரி குப்தா (22), என்பவர் குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்தியது தெரியவந்தது.
இதனையடுத்து உத்தனப்பள்ளி போலீஸார் அப்பெண்ணை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். பெண்கள் தங்கியிருந்த விடுதியின் குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்திய தகவல் பெற்றோர்களுக்கு தெரிந்ததால், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பெற்றோர்கள் வந்து விடுதியின் முன்பு திரண்டனர். இதனால் மேலும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இதனையடுத்து, இன்று காலை எஸ்.பி.தங்கதுரை, ஏடிஎஸ்பி சங்கர் தலைமையில் டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸார் என 200-க்கும் மேற்பட்டோர் விடுதி முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதேபோல் உதவி ஆட்சியர் மாவட்ட வருவாய்த் துறை அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் பெண்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், விடுதியில் தங்கியிருந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் உடைமைகளை எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்கு திரும்பி சென்று வருகின்றனர். விடுதியில் வேறு எங்கும் ரகசிய கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என போலீஸாரின் 10 குழுவினர் ஒவ்வொரு அறையாக சோதனை செய்து வருகின்றனர்.
இது குறித்து ஏடிஎஸ்பி சங்கர் கூறும்போது, “பெண்கள் விடுதியில் ஓர் அறைக்கு 4 பேர் தங்கி உள்ளனர். கடந்த 2-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வடமாநிலத்தை சேர்ந்த பெண்கள் தங்கியிருந்த ஓர் அறையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நீலுகுமாரி குப்தா என்கிற பெண், குளியர் அறையில் சிறிய ரகசிய கேமரா பொருத்தி இருக்கிறார். இது, உடன் தங்கியிருந்த பெண்களுக்கு தெரிந்தது. இது குறித்து விடுதி கண்காணிப்பாளரிடம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து விசாரணை செய்த நிலையில், இந்த தகவல் விடுதியில் தங்கியிருந்த அனைத்து பெண்களுக்கும் தெரிந்ததால், அவர்கள் தங்கியிருந்த குளியல் அறையிலும் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருக்கலாம் என அச்சமடைந்த அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனையடுத்து அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்த பின்னர். கேமரா பொருத்திய நீலுகுமாரி குப்தா என்கிற பெண்ணை கைது செய்துள்ளோம்.
அந்தப் பெண் கேமரா பொருத்திய 30 நிமிடத்தில் கண்டுபிடித்ததால், வீடியோ எதும் பதிவாகவில்லை. மற்ற அறையில் உள்ள குளியல் அறையில் கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பெண் போலீஸாரை வரவழைத்து 10 குழுக்கள் என 100 பெண் போலீஸார் கேமரா உள்ளதா என மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்து வருகின்றனர். அதேபோல் டாடா தொழிற்சாலை நிர்வாகம் சார்பிலும் தனி குழுவினரும் சோதனை செய்து வருன்றனர். கேமார பொருத்தப்பட்டதற்கு வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என தொடர்ந்து விசாரணை செய்து வருகிறோம்” என கூறினார்.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல்துறை சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‘பெண்கள் தங்கும் விடுதியில் உள்ள குளியல் அறையில் கேமார பொருத்திய ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பெண்ணை கைது செய்துள்ளோம். மேலும் இந்த வழக்கை காவல் துறை விசாரணை செய்து வருவதால் உண்மைக்கு புறம்பாக தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT