Published : 04 Nov 2025 09:16 AM
Last Updated : 04 Nov 2025 09:16 AM
கோவை: கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை தனிப்படை போலீஸார் துப்பாக்கியால் காலில் சுட்டுப் பிடித்தனர். பிடிபட்ட 3 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோவை விமான நிலையம் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு வேளையில் கல்லூரி மாணவி ஒருவர், 3 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், போலீஸ் தரப்பு கூறிய தகவல்கள்: தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட 3 பேரும் துடியலூர் வெள்ளகிணறு பட்டத்தரசி அம்மன் கோயில் அருகே பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. தலைமறைவாக இருந்த அந்த மூன்று பேரை போலீஸார் பிடிக்கச் சென்ற பொழுது அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் போலீஸார் மீது தாக்குதல் நடத்தினர்.

இதில் சந்திரசேகர் என்ற காவலருக்கு இடது கை மணிக்கட்டில் வெட்டு விழுந்தது. காவலரை வெட்டிவிட்டு தப்பி ஓடும்பொழுது மூன்று பேர் மீதும் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். மூன்று பேர் காலிலும் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில், அவர்கள் கீழே விழுந்தனர்.
அவர்களை பிடித்து விசாரித்தபோது அவர்கள் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த குணா (எ) தவசி, சதீஷ் (எ) கருப்பசாமி, கார்த்திக் (எ) காளீஸ்வரன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில், 3 பேரையும் கோவை அரசு மருத்துவமனையில் போலீஸார் சேர்த்தனர். இதேபோல அரிவாளால் வெட்டப்பட்டதில் காயமடைந்த காவலர் சந்திரசேகரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பீளமேடு காவல் ஆய்வாளர் அர்ஜுன் மற்றும் சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் ஞானசேகரன் ஆகியோர் தப்பி ஓடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் கருப்பசாமி, காளீஸ்வரன் ஆகிய இருவருக்கும் இரண்டு கால்களிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. குணா என்பவருக்கு ஒரு காலில் மட்டும் குண்டு பாய்ந்த்து. இவர்களுக்கு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இந்த மூன்று பேரும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், இருகூர் பகுதியில் வீடு எடுத்து கட்டிட வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. இதில் கருப்பசாமி, காளீஸ்வரன் ஆகிய இருவரும் சகோதரர்கள் என்பதும்,
இவர்கள் 3 பேர் மீதும் ஒரு கொலை வழக்கு, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.
மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரும் நள்ளிரவு நேரத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT