Published : 03 Nov 2025 06:26 AM
Last Updated : 03 Nov 2025 06:26 AM
சென்னை: தொழில் தொடங்க பெண்ணிடம் ரூ.1 கோடி கடன் பெற்று மோசடி செய்த உறவினர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னை மடிப்பாக்கம், ராம் நகரைச் சேர்ந்தவர் சுகந்தி (57). 2019-ம் ஆண்டு இவரது கணவர் ரமேஷ்குமாரின் அக்கா, பள்ளிக்கரணையில் வசிக்கும் சரளாதேவி, அவரது கணவர் குணசேகர் (67) மற்றும் இவர்களது மகன் விஜய் (36) ஆகியோர் விடுதி நடத்துவதற்காக ரூ.1 கோடி கடனாக கேட்டனர். 2 வருடத்துக்குள் அந்த கடனை வட்டியுடன் செலுத்தி விடுவதாகவும் தெரிவித்தனர்.
இதை நம்பிய சுகந்தி, தங்களுக்குச் சொந்தமான திருவான் மியூரில் உள்ள வீட்டை விற்று அதில் வந்த பணத்தில் ரூ.1 கோடியை வங்கி மூலமாகவும், ரொக்கமாகவும் என சரளாதேவி குடும்பத்தினரிடம் கொடுத்தார். சில மாதங்கள் மட்டும் மாத கடனை செலுத்தியுள்ளனர். பின்னர் 2020-ம் ஆண்டு கரோனா எனக்கூறி 2023-ம் ஆண்டு வரை சிறிய தொகை கொடுத்துள்ளனர்.
மீதத் தொகை ரூ.98 லட்சத்து 30 ஆயிரத்தை செலுத்தாமல் ஏமாற்றி உள்ளனர். இதுகுறித்து கேட்டபோது சரளாதேவி, குணசேகர் மற்றும் மகன் விஜய் ஆகியோர் தகாத வார்த்தைகளால் பேசி பணம் கொடுக்க முடியாது என மிரட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதனால் வேதனை அடைந்த சுகந்தி, இதுகுறித்து மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் சுகந்தி புகாரில் தெரிவித்து இருந்தது உண்மை என தெரியவந்தது. இதையடுத்து குணசேகர், அவரது மகன் விஜய் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT