Published : 03 Nov 2025 08:46 AM
Last Updated : 03 Nov 2025 08:46 AM
பெங்களூரு: கர்நாடக மாநிலம் மேற்கு பெங்களூருவின் கோவிந்தராஜ் நகரில் எம்சி லே அவுட் அருகில், அடிஜிட்டல் வால்ட் அண்ட் போட்டோ எடிட்டிங் நிறுவனம் செயல்படுகிறது.
இங்கு சித்ரதுர்கா பகுதியை சேர்ந்த பீமேஷ் பாபு (41) என்பவர் மேலாளராக பணியாற்றி வந்தார். இந்நிறுவனத்தில் ஆந்திராவை சேர்ந்த சோமலா வம்சி (24) என்ற இளைஞர் தொழில்நுட்ப நிர்வாகியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு நிறுவனத்தில் பணியில் இருந்துள்ளார்.
அப்போது பீமேஷ் பாபு வந்து, தேவைப்படாத இடங்களில் மின் விளக்குகள் எரிவதைப் பார்த்துள்ளார். அவற்றை அணைக்கும்படி வம்சியிடம் கூறியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த வம்சி, திடீரென உடற்பயிற்சி செய்யும் இரும்பு ‘டம்பல்’ எடுத்து பீமேஷ் பாபுவின் தலை, முகத்தில் பல முறை அடித்துள்ளார். இதில் அவர் ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.
அதை பார்த்து பயந்து போன வம்சி தன்னுடன் பணிபுரியும் கவுரி பிரசாத் மற்றும் அவரது நண்பரை துணைக்கு அழைத்தார். பீமேஷ் பாபு பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார். உடனடியாக ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ் வந்துள்ளது. அதில் இருந்த ஊழியர், பாபு ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து கோவிந்தராஜ் நகர் காவல் நிலையத்தில் வம்சி சரணடைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT