Last Updated : 30 Oct, 2025 07:29 PM

 

Published : 30 Oct 2025 07:29 PM
Last Updated : 30 Oct 2025 07:29 PM

புதுச்சேரி ஒப்பந்ததாரர் கொலை - போக்குவரத்து ஊழியர், 2 பெண்கள் கைது

தனஞ்செழியன் | தனஞ்செழியன் மனைவி சுகன்யா | சுகன்யா உறவினர் குணசுந்தரி

சென்னை: புதுச்சேரி அரசு ஒப்பந்ததாரர் கொலையில் தமிழக போக்குவரத்து ஊழியர், மனைவி உறவினருடன் கைது செய்யப்பட்டுள்ளார். மனைவியுடன் தகாத உறவில் இருந்ததால் தீர்த்து கட்டியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

புதுச்சேரி முதலியார்பேட்டை, பாப்பன்சாவடியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (31). இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். இவர் புதுச்சேரி பொதுப்பணித் துறையில் கழிவுநீர் அகற்றும் ஒப்பந்தம் பெற்று சொந்தமாக கழிவுநீர் அகற்றும் வாகனம் வைத்து தொழில் செய்து வந்தார். இந்நிலையில், கழிவுநீர் அகற்று வாகனத்துக்கு தேவையான உதிரி பாகங்கள் வாங்குவதற்காக நேற்று, அவரது பெண் உதவியாளருடன் சென்னை வந்துள்ளார்.

மதியம் 3 மணியளவில் அசோக் நகரில் உள்ள உணவகம் ஒன்றில் சாப்பிட்டு விட்டு காரில் இருக்கும்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர், தான் தயாராக கொண்டு வந்த கத்தியால் பிரகாஷை குத்தி கொலை செய்து தப்பியுள்ளார்.

இது தொடர்பாக அசோக் நகர் போலீஸார் வழக்குப் பதிந்து ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த தனஞ்செழியன் (42), பிரகாஷ் உடன் காரில் வந்த தனஞ்செழியன் மனைவி சுகன்யா (37), இவரது உறவினர் ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த குண சுந்தரி (27) ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில், புதுச்சேரி ஒப்பந்ததாரரை கொலை செய்தது ஏன் என கைது செய்யப்பட்ட தனஞ்செழியன் அளித்துள்ள வாக்கு மூலம்: ”தமிழக அரசு போக்குவரத்துத் துறையில் கிளார்க்காக பணி செய்து வருகிறேன். எனக்கும் புதுச்சேரி நெட்டப்பாக்கத்தைச் சேர்ந்த உறவினர் மகளான சுகன்யா என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மகிழ்ச்சியாக இருந்தோம். எங்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், கோபித்துக் கொண்ட மனைவி, பிள்ளைகளை அழைத்துக் கொண்டு புதுச்சேரியில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். எவ்வளவு அழைத்தும் அவர் திரும்பி வரவில்லை. இந்நிலையில் தான் மனைவிக்கு அவரது பள்ளி பருவ நண்பரான பிரகாஷ் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் இருவரும் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளனர்.

மேலும், பிரகாஷ் எனது மனைவியை அவரது நிரந்தர உதவியாளராக உடன் வைத்துக்கொண்டார். இதனால், எனது மனைவி என்னையே மறந்துவிட்டார். இது எனக்கு ஆத்திரத்தையும், விரக்தியையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஒருமுறை பிரகாஷிடம் சென்று சண்டையிட்டேன். ஆனால், அவர் எனது தரப்பு நியாயத்தை ஏற்றுக் கொள்ளாமல் உதாசீனம் செய்தார்.

மேலும், பிரகாஷ் மற்றும் எனது மனைவி ஆகியோரின் தகாத உறவை கண்டித்து பிரகாஷ் மனைவியும் பிரிந்து பிள்ளைகளுடன் சென்றுவிட்டார். இதையடுத்து, எனது மனைவியும், பிரகாசும் மேலும் நெருக்கம் காட்டினர். இந்நிலையில் தான், சம்பவத்தன்று பிரகாஷ், எனது மனைவியை காரில் அழைத்துக் கொண்டு சென்னை வந்தார்.

அப்போது, எனது மனைவியின் உறவினரான ஐ.டி ஊழியர் குண சுந்தரியை போனில் தொடர்பு கொண்டு, சென்னை அசோக் நகர் வந்துள்ளேன். வா நாம் ஒன்றாக ஓட்டலில் உணவருந்தலாம் என அழைத்துள்ளார். இதையடுத்து, 3 பேரும் ஒன்றாக சாப்பிட்டுள்ளனர். அப்போது, எதார்த்தமாக குண சுந்தரிக்கு நான் போன் செய்தேன்.

அப்போது, எனது மனைவி பிரகாஷ் உடன் ஒன்றாக வந்த தகவலை தெரிவித்தார். அவர்கள் உல்லாசமாக சுற்றுவதை அறிந்து ஆத்திரம் அடைந்த நான் வீட்டில் இருந்த கூர்மையான கத்தியை எடுத்துக் கொண்டு அவர்கள் உணவருந்திய ஓட்டலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றேன். அப்போது, பிரகாஷ் ஓட்டுநர் சீட்டில் சீட்பெல்ட் அணிந்தவாறு அமர்ந்திருந்தார்.

ஆத்திரத்தில் சென்ற நான் அவரது விலா பகுதியில் இரண்டு முறை ஓங்கி குத்தினேன். இதில், அவர் உயிரிழந்தார். இதையடுத்து, எனது மனைவியை அங்கிருந்து மிரட்டி அழைத்துச் சென்றேன். இவ்வாறு தனஞ்செழியன் வாக்கு மூலமாக போலீஸரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, பிரகாஷை மட்டும் அல்லாமல் அவரது மனைவி, இருப்பிடத்தை காட்டிக் கொடுத்த குண சுந்தரி ஆகியோரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x