Published : 30 Oct 2025 06:37 AM
Last Updated : 30 Oct 2025 06:37 AM
சென்னை: அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் (32). எம்பிஏ பட்டதாரியான இவர் காவல் துறையில் உதவி ஆய்வாளராக (எஸ்.ஐ.) பணியில் சேரும் முயற்சியில் இருந்தார். இதற்கான தேர்வையும் எழுதினார். ஆனால் வெற்றி பெற முடியவில்லை. அப்போது அவருக்கு காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூரைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (39) என்பவரது அறிமுகம் கிடைத்தது.
அர்ச்சகரான ரஞ்சித் குமார், தனக்கு அரசு உயர் அதிகாரிகளை நன்கு தெரியும் எனவும், தான் நினைத்தால் அரசு வேலை பெற்றுத் தர முடியும் எனவும் கூறினார். இதை நம்பிய சீனிவாசன், எஸ்.ஐ. பணி பெற்றுத் தர கோரிக்கை விடுத்தார். இதற்கு பணம் தேவைப்படும் என்று கூறியதால் முன்பணமாக 2017 முதல் 2023 வரை பல்வேறு தவணைகளில் ரூ.18 லட்சம் கொடுத்தார்.
பணத்தை பெற்றுக் கொண்ட ரஞ்சித்குமார் எஸ்ஐ பணி கிடைத்ததுபோல் பணி நியமன ஆணை வழங்கினார். அதை எடுத்துக் கொண்டு காவல் துறை பணிக்கு சென்றபோதுதான் அது போலி ஆணை எனத் தெரியவந்தது. இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சீனிவாசன் புகார் அளித்தார்.
இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி, அப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் ரஞ்சித் குமார் மீது அளிக்கப்பட்ட புகார் உண்மை எனத் தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் பதுங்கி இருந்தபோது கைது செய்தனர். அவரிடமிருந்து போலியான பணி நியமன ஆணைகள், வங்கி பாஸ் புத்தகம் மற்றும் வழக்குக்கு தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT