Published : 30 Oct 2025 05:57 AM
Last Updated : 30 Oct 2025 05:57 AM
சென்னை: சென்னையில் இந்தாண்டில் இதுவரை 229 வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இதில் தொடர்புடைய நபரை கைது செய்ய சர்வதேச போலீஸாரின் உதவி நாடப்பட்டுள்ளது. எப்போதாவது ஒருமுறை என்ற நிலை மாறி, தினமும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அதுவும் டிஜிபி அலுவலகத்துக்கே இ-மெயில் அனுப்பி பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், விமான நிலையங்கள், முதல்வர், எதிர்க்கட்சி தலைவர், அமைச்சர்கள், நடிகர், நடிகைகள், தொழில் அதிபர்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுக்கப்படுகிறது.
தலைமைச் செயலகம், ஆளுநர் மாளிகை மற்றும் மத்திய, மாநில அரசு அலுவலகங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. நேற்று அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்துக்கு மிரட்டல் வந்தது. மிரட்டலையடுத்து போலீஸார் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் விரைந்து சென்று சோதனை மேற்கொள்கின்றனர். இதனால் அவர்களது உழைப்பு தினமும் வீணடிக்கப்படுவதோடு, மிரட்டலுக்கு உள்ளான இடத்தில் உள்ளவர்கள் அச்சத்துக்கு ஆளாகின்றனர்.
‘டார்க் வெப்’ மூலம் மிரட்டல்: சென்னையில் இந்தாண்டு இதுவரையில் 229 வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில்கள் டிஜிபி அலுவலகத்துக்கு வந்துள்ளது. அனைத்து மிரட்டல்களும் வெளிநாட்டில் இருந்தவாறு ‘டார்க் வெப்’ என்ற இணையத்தை பயன்படுத்தி அதன் மூலம் விடுக்கப்படுகிறது. இதனால் மிரட்டல் ஆசாமிகளை அடையாளம் காண்பது போலீஸாருக்கு கடினமாக உள்ளது.
இருப்பினும் சர்வதேச போலீஸார் உதவியுடன் வெடிகுண்டு மிரட்டல் ஆசாமியை கைது செய்ய போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். வெடிகுண்டு மிட்டலையடுத்து சம்பவ இடம் விரைந்து சோதனை நடத்த சென்னையில் வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் 4 அணிகள் உள்ளன. அதோடு மட்டும் அல்லாமல் 4 மோப்ப நாய்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT