Published : 30 Oct 2025 06:55 AM
Last Updated : 30 Oct 2025 06:55 AM

தி.மலை | கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 2 காவலர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

சுரேஷ்ராஜ், சுந்தர்

திருவண்ணாமலை: ​திருவண்ணாமலையில் ஆந்திர மாநில இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான காவலர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் உத்தரவிட்டுள்ளார். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் இருந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்வதற்காக, தாய் மற்றும் மகள் ஆகியோர் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி இரவு திருவண்ணாமலைக்கு வாழைக்காய் ஏற்றிய வாகனத்தில் வந்னர்.

அப்போது, இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய காவலர்கள் சுரேஷ்ராஜ் மற்றும் சுந்தர் ஆகியோர், பெண்கள் இருவரையும் தனியாக அழைத்துச் சென்றுள்ளனர்.

பின்னர், ஆளில்லாத இடத்தில் வளர்ப்புத் தாயின் கண்முன்னே இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர், அவர்களை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றுள்ளனர். அந்த வழியாகச் சென்றவர்கள் இளம்பெண்ணை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது தொடர்பான புகாரின்பேரில் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து காவலர்கள் சுரேஷ்ராஜ், சுந்தர் ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இருவரையும் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உத்தரவிட்டார்.

இந்நிலையில், காவலர்கள் இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான உத்தரவு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுரேஷ்ராஜ், சுந்தர் ஆகியோரிடம் வழங்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x