Published : 26 Oct 2025 10:11 AM
Last Updated : 26 Oct 2025 10:11 AM
இரிடியம் முதலீட்டில் ரூ.1,000 கோடிக்கு மேல் மோசடி நடைபெற்றுள்ளதாக எழுந்த புகாரின் பேரில், தமிழகத்தில் இதுவரை 62 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இரிடியத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் ரூ.1 கோடி தரப்படும் என தமிழகம் முழுவதும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்துள்ளது. இதற்காக ரிசர்வ் வங்கியில் பதிவு செய்தது போன்று போலியாக காட்டி இரிடியம் விற்பனையில், ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், 3 மாதத்தில் ரூ.1 கோடி லாபம் கிடைக்கும் எனக் கூறி இம்மோசடி நடந்துள்ளது.
இதுகுறித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த சிபிசிஐடி போலீஸார், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் விசாரணை நடத்தி மோசடி கும்பலை சேர்ந்தவர்களை கைது செய்து வருகின்றனர். முதற்கட்டமாக, செப்.12ம் தேதி மோசடி கும்பலை சேர்ந்த 30 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
அதன்படி, கடந்த 23, 24-ம் தேதிகளில், 2-ம் கட்டமாக சிபிசிஐடி போலீஸார், 15 மாவட்டங்களில் சோதனை மற்றும் தேடுதல் வேட்டையை நடத்தினர். இப்பணியில், 8 டிஎஸ்பி-க்கள், 20 காவல் ஆய்வாளர்கள், 15 காவல் உதவி ஆய்வாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அப்போது, கம்பத்தை சேர்ந்த சந்திரன், பெருமாநல்லூரை சேர்ந்த ராணி, முசிறியை சேர்ந்த யுவராஜ், வருசநாடு பகுதியை சேர்ந்த பழனியம்மாள், நாகையை சேர்ந்த ராஜசிவம் ஆகிய 5 முக்கிய குற்றவாளிகள், அவர்களது கூட்டாளிகள் 27 பேர் என 32 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிபிசிஐடி அறிவுறுத்தல்: இந்த வழக்கில் இதுவரை 62 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக, தொடர் விசாரணை நடந்து வருகிறது. ரூ.1 லட்சம் கொடுத்தால், இரிடியம் விற்பனை வாயிலாக கோடிக் கணக்கில் வெளிநாட்டிலிருந்து பணம் கிடைக்கும், ஆர்பிஐ வாயிலாக பணம் கிடைக்கும் போன்ற வதந்திகளை நம்பி மக்கள் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என, சிபிசிஐடி போலீஸார் அறிவுறுத்தி உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT