Published : 26 Oct 2025 01:11 AM
Last Updated : 26 Oct 2025 01:11 AM

எல்.கே.அத்வானியை கொல்வதற்காக பாலத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கில் தென்காசி ஹனீபா குற்றவாளி

மதுரை: ​பாஜக மூத்த தலை​வர் எல்​.கே.அத்​வானியை பாலத்​தில் குண்டு வைத்து கொலை செய்ய முயற்​சித்​தது தொடர்​பான வழக்​கில் தென்​காசி ஹனீபா குற்​ற​வாளி என்று உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு தீர்ப்​பளித்​தது.

2011-ல் பாஜக மூத்த தலை​வர் எல்​.கே.அத்​வானி தமிழகத்​தில் ரதயாத்​திரை மேற்​கொண்​ட​போது மதுரை மாவட்​டம் திரு​மங்​கலம் ஆலம்​பட்டி அரு​கே​யுள்ள பாலத்​தில் பைப் வெடிகுண்டு வைத்​து, அவரைக் கொல்ல முயற்சி நடை​பெற்​றது. இந்த வழக்​கில் முகமது ஹனீபா என்ற தென்​காசி ஹனீபா உள்​ளிட்​டோர் மீது போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​தனர்.

தொடர்ந்​து, தென்​காசி ஹனீ​பாவை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு திண்​டுக்​கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதி​மன்​றத்​தில் நடை​பெற்​றது. வழக்​கி​லிருந்து தென்​காசி ஹனீபா விடுவிக்​கப்​பட்​டார். இதை எதிர்த்து கோவை சிபிசிஐடி ஏடிஎஸ்பி தரப்​பில் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது.

இந்த மனுவை விசா​ரித்த நீதிப​தி​கள் பி.வேல்​முரு​கன், எல்​.விக்​டோரியா கௌரி அமர்​வு, தங்​களது தீர்ப்​பில், "இவ்​வழக்​கில் அரசுத் தரப்பு சாட்​சிகள் மற்​றும் ஆவணங்​கள் நம்​பும் வகை​யில் உள்​ளன. கைப்​பற்​றப்​பட்ட வெடிபொருட்​கள் உண்​மை​யானவை என்று வெடிமருந்து ஆணை​யம் தெரி​வித்​துள்​ளது. எனவே, அவரை விடு​வித்த திண்​டுக்​கல் நீதி​மன்ற உத்​தரவு ரத்து செய்​யப்​படு​கிறது. இந்த வழக்​கில் தென்​காசி ஹனீபா குற்​ற​வாளி என்று இந்த நீதி​மன்​றம் முடிவு செய்​கிறது. அவருக்​குரிய தண்​டனை விவரங்​கள் வரும் 28-ம் தேதி தெரிவிக்​கப்​படும். அப்​போது அவர் ஆஜராக வேண்​டும்" என்​று தெரி​வித்​துள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x